பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

ராணி மங்கம்மாள்

"உங்களுக்கு நான் என்ன செய்யவேண்டும்?"

"மகாராணி நீங்கள் எனக்கு என்ன செய்யவேண்டும் என்பதைப் பின்பு சொல்லுகிறேன். உங்களுக்குக் கிடைக்க இருக்கும் கீர்த்தியையும் வெற்றியையும் இப்போது சொல்கிறேன். கேட்டுக் கொள்ளுங்கள். இந்தப் போரில் நீங்கள் மகத்தான வெற்றி பெறப் போகிறீர்கள்."

"உங்கள் ஆரூடத்திற்கு நன்றி இப்போது உங்களுக்கு நான் என்ன செய்யவேண்டும்? உங்கள் கஷ்டம் என்னவானாலும் தயங்காமல் என்னிடம் சொல்லலாம்."

"என் காரியத்துக்கு அவ்வளவு அவசரமில்லை மகாராணி உங்களுக்கு இந்தப் போரில் வெற்றி கிடைத்த பின்னர் வந்து மகிழ்ச்சியோடு என் கோரிக்கையைச் சொல்வேன்."

"போரில் நான் வெற்றி பெறவேண்டுமென்று வாழ்த்துகிறீர்கள் வாழ்த்துகிறவர்களை வெறுங்கையோடு அனுப்புவது இந்த அரண்மனை வழக்கமில்லை."

"மன்னிக்க வேண்டும் மகாராணி எனக்கு வேண்டியதை எப்போது வந்து பெற்றுச் செல்ல வேணுமோ அப்போது கட்டாயம் தேடிவருவேன்.”

என்று கூறி வணங்கிவிட்டுப் பதிலையே எதிர்பாராமல் விருட்டென்று திரும்பிச்சென்றுவிட்டார் அந்தப் பக்கிரி.

ராணிக்கு இது பெரிய ஆச்சரியமாயிருந்தது. தேடி வந்து மின்னலைப்போல் எதிர் நின்று வாழ்த்திவிட்டு உடனே விரைந்து சென்றுவிட்ட அந்த மனிதர் ராணிக்கு ஒரு புதுமையாகத் தோன்றினார்.

வியப்புடன் உள்ளே சென்றாள் ராணி, இந்த இஸ்லாமியர் வந்தது. சொல்லியது, திரும்பியது எல்லாமே புதுமையாக இருந்தன.

திட்டமிட்டபடி தளபதி நரசப்பய்யா மிகவும் இரகசியமாகப் படைகளுடன் தஞ்சையை நோக்கி முன்னேறினார்.