உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

ராணி மங்கம்மாள்

உடனே அதிகாரிகளை அழைத்துத் திரிசிரபுரத்துக்கு அருகிலுள்ள சில காவிரிக்கரை சிற்றூர்களை அந்தத் தர்க்காவுக்கு மானியமாக வழங்க உத்தரவிட்டாள் ராணி மங்கம்மாள்.

இஸ்லாமியத் துறவி மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.

"ஆண்டவன் உங்களுக்குப் பரந்த மனத்தைக் கொடுத்திருக்கிறான் அம்மா! நீங்கள் ஒரு குறையும் வராமல் நீடுழி வாழவேண்டும்."

"ஶ்ரீரங்கநாதன் மேல் எனக்கு எவ்வளவு பக்தி உண்டோ அவ்வளவு நல்லெண்ணமும் பக்தியும் என் ஆட்சியில் வாழும் எல்லாப்பிரிவு மக்கள் மேலும் உண்டு ஐயா!" என்றாள் ராணி மங்கம்மாள். பக்கிரி விடைபெற்று வாழ்த்திவிட்டுச் சென்றார்.

ராணி மங்கம்மாள் விரைந்து அரண்மனையின் உட்பகுதிக்குச் செல்ல இருந்தாள். அப்போது மீண்டும் வாயிற்காவலன் ஒருவன் அவளெதிரே தோன்றி, "காவிரிக்கரையில் வேளாண் தொழில் செய்து உழுதுண்டு வாழும் உழவர்கள் சிலர் தங்களைக் காண அவசரமாக வந்திருக்கிறார்கள் மகாராணி!" என்று பவ்யமாக வணங்கியபடி தெரிவித்தான்.


22. காவிரி வறண்டது!

ப்போதிருந்த பரபரப்பில் காவிரிக்கரை உழவர்களைப் பார்க்க முடியாது போலிருந்தது. தேடி வந்திருக்கும் அந்த உழவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டு மறுபடிசில நாள் கழித்து வந்து தன்னைச் சந்திக்கச் சொல்லலாமே என்று தான் முதலில் ராணி மங்கம்மாளுக்குத் தோன்றியது. ஆனால் அடுத்த கணமே அந்த அபிப்ராயத்தை அவள் மாற்றிக் கொண்டாள்.