பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

171

திட்டமிட்டான் அவன். காற்று அவனுக்குச் சாதகமாக அவனது பக்கம் வீசியது.

அவன் திரிசிரபுரத்துக்கு வந்தபோது கையில் பெரிய அளவு திறைப்பொருளோடும் காவிரி நீரைப் பற்றிய பிரச்சினையோடும் வந்து சேர்ந்திருந்தான்.

ஒரு வலுவான பொது எதிரி ஏற்பட்டபின் உதிரியாகத் தங்களுக்குள் விரோதிகளாக இருந்த பலர் அந்தப் பொது எதிரியைக் கருதித் தங்கள் சிறிய விரோதங்களைத் தவிர்த்துவிட்டு நண்பர்களாகி விடுவதும், ஒரு வலுவான பொது நண்பனை அடையும் முயற்சியில் தங்களுக்குள் நண்பர்களாக இருந்த பலர் அந்தப் பொது நண்பனின் சிநேகிதத்தைப் பெறும் போட்டியில் தங்கள் நட்பை இழந்து விரோதிகளாகி விட நேர்வதும் இராஜ தந்திரத்தில் தவிர்க்க முடியாதவை என்பதைப் பாலோஜி அறிந்திருந்தான். மைசூர்ச் சிக்கதேவராயன் காவிரியை மட்டும் தடுத்திராவிட்டால் பாலோஜி இந்த இராஜதந்திர லாபத்தை அடைந்தே இருக்கமுடியாது. சந்தர்ப்பத்தைத் தனக்கு ஏற்படுத்தித் தந்த தெய்வத்துக்கு இதயபூர்வமாக நன்றி தெரிவித்துக்கொண்டே திரிசிரபுரத்துக்கு வந்து காத்திருந்தான் அவன். இந்த ராஜதந்திர லாபத்தை வைத்து ஷாஜியிடம் தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று எண்ணினான் அவன்.

ராணி மங்கம்மாளும் அவளுடைய இராயசமும், பிரதானிகளும், தளபதியும், தஞ்சை மன்னனின் அமைச்சனான பாலோஜியைச் சந்திக்க இணங்கினார்கள். பாலோஜி அவர்களைச் சந்தித்து மிகவும் பவ்யமாக நடந்துகொண்டான். சிரமப்பட்டுத் திரட்டியிருந்த பெரும்பொருளை ராணி மங்கம்மாளிடம் காணிக்கையாகச் செலுத்தினான்.

"மகாராணி! நடந்துவிட்ட சில தவறுகளுக்காகவும், முறைகேடுகளுக்காகவும் தஞ்சை நாட்டின் சார்பில் என் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். நமக்குள் ஒற்றுமையும் பரஸ்பரம் உதவியும் வேண்டும். நாம் ஒற்றுமையாயில்லாதிருந்த காரணத்தினால்தான் காவிரியை அணையிட்டுத் தடுத்துக்கொள்ளும் துணிவு