பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

ராணி மங்கம்மாள்

அவ்வளவு வலிமையும் படை பலமும் என்னிடம் இல்லை. இந்த இக்கட்டான சமயத்தில் தஞ்சை நாட்டைக் காப்பாற்ற ராணி மங்கம்மாளோடு சமாதான உடன்பாடு செய்த உன் சாதுரியத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும் அப்பா! முன்பு உன்னைப் பற்றி நான் தவறாக நினைத்திருந்ததற்காக இப்போது நீ என்னை மன்னித்து விடவேண்டும்" என்று மனமுருகிப் பாலோஜியை வேண்டினான் ஷாஜி.

உடன் தஞ்சைப் படைகள் திரிசிரபுரத்துக்கு விரைந்தன. அங்கு ஏற்கனவே மைசூருக்குப் புறப்பட ஆயத்தமாக இருந்த ஒரு பெரும் படையுடன் தளபதி நரசப்பய்யா காத்திருந்தார்.

சோழநாட்டின் உழவர் வாழ்வுக்கு உயிரோட்டமாயிருந்த காவிரி நீர்ப்பெருக்கு வறண்டதால் விளைந்த சீற்றம் அந்தப் படைவீரர்களின் வெப்பம் கலந்த மூச்சுக் காற்றில் மேலும் சூடேற்றியிருந்தது. எப்படியும் மைசூரின்மேல் படையெடுத்துக் காவிரி நீரைத் தடுக்கும் அணையை உடைத்தே ஆகவேண்டும் என்ற வேகத்தோடு படைகள் இருந்தன. தஞ்சை நாட்டுக்கும், மதுரைப் பெரு நாட்டுக்கும் ஒற்றுமை ஊற்றுச் சுரப்பதற்குக் காவிரி வறண்டு போக வேண்டியிருந்தது.

காவிரி வறண்டிருக்காவிட்டால் அந்த ஒற்றுமையே ஏற்பட்டிராது. அந்த அசாத்தியமான ஒற்றுமையைக் காவிரியின் வறட்சிதான் அவர்களிடையே ஏற்படுத்தியிருந்ததென்று சொல்ல வேண்டும்.

தஞ்சைப்படைகளும், திரிசிரபுரம் படைகளும் மைசூரை நோக்கிப் பாயத் துணிந்து நின்றன. படைகளின் தளபதி நரசப்பய்யா மைசூரை வெல்லும் மன உறுதியோடு நிமிர்ந்து நின்றார்.

ஆனால் முற்றிலும் யாரும் எதிர்பாராத அதிசயமாக அந்தச் சமயத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி அப்படையெடுப்புக்கே அப்போது அவசியம் இல்லாமல் போகும்படிச் செய்துவிட்டது.