பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

ராணி மங்கம்மாள்

கூறாமலே விட்டுவிட்டார்கள். குற்றவாளி தன் சகோதரன் முறையினன் என்பதற்காக ஏதாவது சலுகை காண்பிக்கிறார்களா என்பதை முதலில் இருந்தே ஒற்றர்கள் வைத்துக் கண்காணித்து வந்த ராணி மங்கம்மா துணிந்து தானே நீதி வழங்க முன்வந்தாள்.

'ராணிக்குச் சகோதரன் முறை என்பதனால்தான்க குற்றவாளிக்குத் தண்டனை எதுவும் கொடுக்கவில்லை' என்று ஊரெல்லாம் வேறு பேச்சுக் கிளம்பிவிட்டது. ராணி மங்கம்மாள் தானே நீதிமன்றத்தைக் கூட்டினாள். "தங்கள் சகோதரனுக்கு எப்படி மரண தண்டனை அளிப்பது என்பதே எங்கள் தயக்கம் என்றுதான் நாங்கள் தீர்ப்புக் கூறவில்லை" என்று நியாயாதிபதிகள் அவளிடமே தயக்கத்தோடு கூறினார்கள். வேண்டியவர் வேண்டாதவர் என்றெல்லாம் பார்ப்பது நியாயத்திற்கு அழகில்லை. குற்றவாளிக்கு அரசியாகிய நானே மரணதண்டனை விதிக்கிறேன்" என்று சிறிதும் கலங்காத குரலில் தீர்ப்பளித்தாள் ராணி மங்கம்மாள். அந்த நேர்மையைக் கண்டு அன்று நீதிபதிகள் வியந்தனர்.

அப்படி வியப்பைச் சம்பாதித்த தனது நேர்மைக்கா இன்று இப்படி ஓர் அபவாதம் என்றெண்ணும் போது அவள் கண்களில் நீர் சுரந்தது.

இன்னொரு முறை அவள் பழனி மலையிலுள்ள முருகப் பெருமானை வணங்குவதற்குச் சென்றிருந்தாள். அடிவாரத்திலிருந்து மலைக்குச் செல்லும்போது உரிய காவலர்கள், பரிவாரம், மெய்க்காப்பாளர்கள் எல்லாரும் உடனிருந்தும் கூட ஒரு சிறிய அசம்பாவிதம் நேர்ந்துவிட்டது.

ராணி தரிசனத்துக்காக மலைமேல் ஏறிக்கொண்டிருக்கும்போது தரிசனத்தை முடித்து விட்டுப் பக்தி பரவசச் சிலிர்ப்போடு தன்னை மறந்த இலயிப்பில், மலையிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்த வாலிபன் ஒருவன் அவள் மேல் மோதிவிடுவது போல் மிக அருகே வந்து விட்டான்.

மங்கம்மாளின் மெய்க்காப்பாளர்கள் அந்த வாலிபனைப் பிடித்துத் தண்டிக்க ஆயத்தமாகி விட்டார்கள். ராணியோ