பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

ராணி மங்கம்மாள்

இடக் கையால் தாம்பூலம் தரித்துவிட்ட பாவத்திற்காக மங்கம்மாள் ஏதேதோ தானதருமங்களைச் செய்யப்போக அதை அவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு விஜயரங்கனிடம் சொல்லித் தூற்றுவதற்கு இடம் கிடைத்தது.

"அருமை இளவரசே! உங்கள் பாட்டியார் மகாராணி மங்கம்மாள் போகிற போக்கைப் பார்த்தால் காற்றையும் காவிரித் தண்ணீரையும் தவிர உங்களுக்கு வேறு எதையும் மீதம் வைத்து விட்டுப் போகமாட்டார்கள் போலிருக்கிறது. அரண்மனைச் சொத்துகள் எல்லாம் தான தருமங்களுக்குப் போய்க் கொண்டிருக்கின்றன. கோயில் குளங்களுக்கும், தர்ம சத்திரங்களுக்கும் போவதற்கு இது என்ன பிள்ளையில்லாத சொத்தா? இந்தச் சொத்து ஏன் இப்படிப் பாழ் போகிறது? ஏற்கெனவே பாதி ராஜ்யத்தைக் கிழவன் சேதுபதி பறித்துக் கொண்டாயிற்று. மீதி இருப்பதையும் எவனாவது பறித்துக் கொள்வதற்குள்ளாவது ஆட்சியை நீங்கள் கைப்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் காலம் இப்படியே இளவரசுப் பட்டத்தோடு கழிய வேண்டியதுதான். இளவரசுப் பட்டத்தால் என்ன லாபம்? ஆட்சி மட்டும் பாட்டியிடம். வெறும் இளவரசுப் பட்டம் மட்டும் உங்களிடம். நீங்கள் உடனே தட்டிக் கேட்காவிட்டால் உங்களுக்கு எதுவும் கிடைக்காது" என்று தூபம் போட்டார்கள் கலகக்காரர்கள். விஜயரங்கன் அதைக் கேட்டு ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்காமல் புத்தி பேதலித்துப் போனான். தன் நன்மைக்காகவே அவர்கள் அந்த யோசனைகளைச் சொல்வதாக நம்பினான். அவர்களுடைய சுயநன்மைக்காகவே ஆட்சி தன் கையில் வரவேண்டுமென அவர்கள் நினைத்துத் தன்னைத் தூண்டுகிறார்கள் என்பது அப்போது அவனுக்குப் புரியவில்லை.

பாட்டி ராணி மங்கம்மாளிடம் நேரில் போய் இரண்டில் ஒன்று கேட்டுவிடுவது என்று பிடிவாதமான முடிவுக்கு வந்தான் விஜயரங்கன். அரசாட்சி தொடர்பாகத் தன்னை எதுவுமே கலந்தாலோசியாமல் ஒதுக்கி வைக்கும் பாட்டியிடம் ஏதோ பெரிய சூழ்ச்சியும் சூனியக்கார எண்ணமும் இருப்பதாக அவன் நம்பத் தொடங்கிவிட்டான். ஆனால் ஒரு சிறு சந்தேகமும் இருந்தது. அந்தச்