பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/208

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

ராணி மங்கம்மாள்

இப்படிக் கூறிய அவனை இடைமறித்து அச்சையா ஏதோ சமாதானம் சொன்னார். விஜயரங்கன் உடனே அவரையும் எடுத்தெறிந்து பேசிவிட்டான். ராணிமங்கம்மாள் கடும் கோபத்தோடு அவனை எச்சரித்தாள்.

"நீ கேட்பார் பேச்சைக் கேட்டு நாசமாய்ப் போகாமல் தடுப்பதற்காகவே உன்னைக் கூப்பிட்டேன். நாயக்க வம்சத்தின் நல்லாட்சியைச் சீரழிக்க விரும்பும் கலகக்காரர்களின் தொடர்பால் தான் நீ அழியப் போகிறாய்."

"உண்மையில் அழியப் போவது யார், நீங்களா, நானா என்று பொறுத்திருந்து பாருங்கள்."

முகத்திலடித்தாற்போல இப்படிக் கூறிவிட்டு விரைந்து சென்றுவிட்டான் விஜயரங்கன். அவனைத் திருத்த முடியாதென்று அவர்களுக்குத் தெரிந்துவிட்டது.

அவன் சென்ற பின் இனி அவனுக்கு அறிவுரைகள் கூறிப் பயனில்லை என்ற முடிவுக்கு வந்த ராணி மங்கம்மாளும் தளவாய் அச்சையாவும் விஜயரங்கனின் நடவடிக்கைகளை இடைவிடாமல் கண்காணிக்க ஒற்றர்களை ஏற்பாடு செய்தார்கள். நேரடியாக முழு ஆட்சிப் பொறுப்பையும் அவனிடம் அளிக்காவிட்டாலும், ஒரு சில் பொறுப்புகளை அவனிடம் விட்டுவிடலாம் என்று முதலில் நினைத்தாள் ராணி மங்கம்மாள். ஆனால் தளவாய் அச்சையா அதற்கும் இணங்கவில்லை. அப்படிச் செய்வது விஷப்பரீட்சையாக முடிந்துவிடும் என்று அபிப்பிராயம் தெரிவித்தார் அவர்.

இவ்வளவுக்கும் பின்புதான் அவன் எங்கெங்கே போகிறான் என்னென்ன செய்கிறான் என்று இரகசியமாகக் கண்காணிக்க ஏற்பாடு செய்தாள் ராணி மங்கம்மாள்.

சில நாட்கள் கழிந்தன. ஒற்றர்கள் வந்து தெரிவித்த தகவல்கள் ராணி மங்கம்மாள் மேலும் கலக்கமடைவதற்குக் காரணமானவையாக இருந்தன. விஜயரங்க சொக்கநாதன் விஷமிகளும்,