பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

ராணி மங்கம்மாள்

"நான் அற்பனா, வீரதீரனா என்பது போகப் போகப் புரியும் பாட்டி! இன்றைக்குத்தான் எனக்கு விடிந்தது. இனி உங்களுக்குப் பொழுது விடியாது! விடியவிடமாட்டேன்."

"இது அக்கிரமம் நீ உருப்படமாட்டாய்."

"இதில் எதுவும் அக்கிரமமில்லை பாட்டி இந்த வயதான காலத்தில் உங்களைத் தொல்லைப்படுத்த வேண்டாமென்று நானே முடிசூட்டிக்கொண்டுவிட்டேன்; இதிலென்ன தவறு?"

ராணி மங்கம்மாள் அவனுக்கு மறுமொழி கூறவில்லை. சேற்றில் கல்லை வீசியெறிந்தால் பதிலுக்கு அது தன் மீது தான் தெறிக்கும் என்றெண்ணி, அவனோடு பேசுவதைத் தவிர்த்தாள் அவள் விழிகளில் கண்ணீர் பெருக அவள் மீண்டும் தான் சிறை வைக்கப்பட்டிருந்த படுக்கை அறை மூலையில் போய் அமர்ந்தாள். அவன் வெளியே எக்காளமிட்டுக் கைகொட்டி நகைத்தான். அந்த வஞ்சக நகைப்பைக் கேட்டு அவளுக்கு அடிவயிறு பற்றி எரிந்தது.

"பாட்டி ஞாபகம் வைத்துக்கொள்! நீ வைத்த கட்டுக் காவலில் இருந்து நான் தப்பி ஓடியது போல், நீ இங்கிருந்து தப்ப முடியாது. தப்ப முயற்சி செய்தாயோ பின் விளைவுகள் மிகவும் விபரீதமாயிருக்கும்..." என்று அவளை உரத்த குரலில் எச்சரித்துவிட்டுப் போய்ச்சேர்ந்தான் விஜயரங்கன்.

முன்பொருநாள் இதே விஜயரங்கனின் குழந்தைப் பருவத்தில் இவன் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தின் கோபுர உச்சியிலிருந்து தன்னைத் தலைகுப்புறப் பிடித்துத் தள்ளுவது போல அதிகாலையில் கண்ட கெட்ட கனவு இப்போது ராணி மங்கம்மாளுக்கு மீண்டும் ஞாபகம் வந்தது.

சுதந்திரமாக வளர்ந்து பேரரசனுக்கு வாழ்க்கைப்பட்டு அவன் மறைந்த பின்னும் அந்தப் பேரரசைத் தன்னந்தனியே வீராங்கனையாக நின்று கட்டிக்காத்து, முடிவில் சொந்தப் பேரனாலேயே இப்படிச் சிறை வைக்கப்பட்டகொடுமை அவள் மனத்தைப் பிளந்தது. அவள் மனம் புழுங்கினாள். தவித்தாள். குமைந்தாள். குமுறினாள்.