பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

ராணி மங்கம்மாள்

பெற்றுக் கொண்டிருந்தன. சில வீரர்கள் கூடிப்பேசிக் கொண்டிருந்தார்கள். சிலர் பொழுதுபோக்கான விளையாட்டுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். வேறு சிலர் ஒரு வீரனுக்கு ரதிவேடம் போட்டுக் காமன் பண்டிகைக் கூத்தாக இருபிரிவாய்ப்பிரிந்து எரிந்த கட்சிக்கும், எரியாத கட்சிக்கும் பாடிக் கொண்டிருந்தார்கள்.

தனது படைவீரர்கள் இந்தப் போரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள், எப்படி உணர்ந்திருக்கிறார்கள் என்று காணவும் விரும்பினான் ரங்ககிருஷ்ணன். மாறுவேடத்தில் நகர பரிசோதனை செய்யச் செல்லும் மன்னர்கள் போல முற்றிலும் தன் தோற்றத்தை மாற்றிக் கொள்ளாவிட்டாலும், தன்னை யாரும் அடையாளம் காண முடியாத விதத்தில் ஒரு போர்வையைப் போர்த்திக் கொண்டு புறப்பட்டான் அவன். உடன் துணை வர முயன்ற மெய்க் காப்பாளனைக் கூடத் தடுத்துவிட்டான். இது முதற் படையெடுப்பு என்பதால் மட்டும் அவன் மனத்தில் ஆவலும் பரபரப்பும் நிரம்பியிருக்கவில்லை. படையெடுப்பவராகிய கிழவன் சேதுபதியைப் பொறுத்தே பல மடங்கு அதிகரித்திருந்தன.

'கிழவன்' என்ற தமிழ்ச்சொல்லுக்கு 'உரியவன்' என்று பொருள். இரகுநாத சேதுபதி மறவர் நாட்டுக்கு உரியவர் மட்டுமில்லை. மறவர்கள் அனைவரின் நம்பிக்கைக்கும் உரியவர். பயபக்திக்கு உரியவர். அத்தகையவரோடு தான் போர் புரிவதற்கும் முரண்படுவதற்கும் அரசியல் காரணங்களிருந்தன என்றாலும் தன்னைச் சுற்றியுள்ள மக்களின் நம்பிக்கைக்கும் நாணயத்திற்கும், மதிப்புக்கும் உரிய ஒருவரை வெறும் அரசியல் காரணங்களுக்காக வெல்வது சிரமமான காரியமாயிருக்கும். மறவர் சீமையின் முரட்டுச் சிங்கத்தோடு விரோதத்தைத் தவிர்த்திருப்பது தான் ராஜ தந்திரமாயிருந்திருக்கும். சில விரோதங்களைத் தவிர்ப்பது தான் விவேகம். வேறு சில விரோதங்களை எதிர்கொண்டு ஏற்றாக வேண்டும். இதில் கிழவன் சேதுபதியோடு ஏற்பட்டு விட்ட விரோதம் முந்தினவகையினது.அது தவிர்த்திருக்கப்படவேண்டியது. ஆனால் தவிர்க்க முடியாதபடி சேதுபதியே அதை வலிந்து ஏற்படுத்திக்