பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

57

எந்தத் திசையிலிருந்தும் சேதுபதியும் மறவர் சீமைப்படைகளும் அந்த நள்ளிரவில் தங்களைத் தேடிவந்து தாக்கக்கூடும் என்ற பயமும் ரங்க கிருஷ்ணனுக்கு இருந்தது. ஆனால் அவன் பயந்தபடி எதுவுமே நடக்கவில்லை.

பொழுது விடிவதற்குச் சில நாழிகைகள் இருக்கும் போது தொலைவிலிருந்து பாசறையை நெருங்கிவரும் ஒற்றைக் குதிரையின் குளம்பொலி கேட்டது. போனவன் திரும்பி வந்திருந்தான்.

ரங்ககிருஷ்ணனே ஆவல் மிகுதியினால் பாசறைக் கூடாரத்திலிருந்து வெளியே வந்து அந்த வீரனை எதிர்கொண்டு நின்றான்.

"சேதுபதியைப் பார்த்தாயா? என்ன சொன்னார்?"

"ஆனமட்டும் முயன்றேன். அவரைப் பார்க்க முடியவில்லை. ஊரில் இருக்கிறாரா, இல்லையா என்பதைக் கூட அறிய முடியவில்லை. சிலர் திருப்புல்லாணி போயிருக்கிறார் என்றார்கள். சிலர் உத்தரகோசமங்கை போயிருப்பதாகச் சொன்னார்கள். வேறு சிலர் இராமேஸ்வரம் போயிருக்கிறார் என்றார்கள்."

"நீ நம்மிடமிருந்து வந்திருக்கும் தூதன் என்பதைக் கூறிய பின்புமா அந்த நிலை?"

“ஆம் அரசே! இந்த ஊர் எப்படி அமைதியாகப் போர்க் கவலையின்றி இருக்கின்றதோ இதே போல்தான் இராமநாதபுரமும் இருக்கின்றது. யாருமே போரைப் பற்றிக் கவலைப்படவில்லை."

"நான் படையெடுத்து மானாமதுரை வந்து தங்கியிருக்கிறேன் என்பதையாவது அவர்களுக்குத் தெரிவித்தாயா?"

"சேதுபதியின் மாபெரும் அரண்மனையில் என்னிடம் அதைப் பொருட்படுத்திக் கேட்க யாருமில்லை."

"திமிர் அதை ஒடுக்கியே ஆகவேண்டும். வேறு வழியில்லை."

"இந்தப் படையெடுப்பால் எதுவும் பாதிக்கப்பட்டு விட மாட்டோம் என்பது போல் ஜனங்களும், அரண்மனையிலுள்ளவர்களும் மிதப்பாக இருக்கிறார்கள், அரசே! அவர்கள் நம்மை எதிர்ப்பதற்குத் தங்கள் படைகளைக் கூட ஆயத்தம் செய்யவில்லை."