பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

ராணி மங்கம்மாள்

புலவர்களுக்கும் சன்மானம் அளிக்கிற சாக்கில் ரங்ககிருஷ்ணனைக் கொஞ்சம் அலட்சியப்படுத்த முடிந்தது அவரால். மிகவும் தற்செயலாக நேர்வதுபோல அதைச் செய்தார் அவர்.

ஆனால், அடுத்த சில கணங்களிலேயே சேதுபதி சமாளித்துக் கொண்டுவிட்டார்.

"வரவேண்டும் வரவேண்டும் சின்னநாயக்கரை வரவேற்க இந்தச் சேதுபதியின் ஏழை ராஜசபை கொடுத்து வைத்திருக்கிறது. பட்டமகிஷியுடன் வருவீர்கள் என்று விருந்தளிக்கக் காத்திருக்கிறேன் நான். தனியாக வந்திருக்கிறீர்களே?" என்று எதிர்கொண்டு நடந்து ஓடிவந்து ரங்ககிருஷ்ணனை அப்படியே கட்டித் தழுவிக்கொண்டார் அவர் கிழச்சிங்கம் ஒன்று ஓடிப்பாய்ந்து வந்து ஓர் இளைஞனைக் கட்டித் தழுவுவது போலிருந்தது அந்தக் காட்சி. ரங்ககிருஷ்ணன் அந்தத் தழுவுதலைத் தவிர்க்கவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல் திணறினான். அடுத்து அவர் செய்த காரியம் அவனை இன்னும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது.

தன் சபைக்குள் திடீரென்று நுழைந்துவிட்ட ரங்ககிருஷ்ணன் முதலியவர்களை முறையாக வரவேற்பதுபோல் சபையினரை நோக்கிச் சேதுபதி கூறலானார்.

"சபையோர்களே நம் சின்ன நாயக்கர் பதவியேற்று முடி சூடிக்கொண்டு படைகளுடன் இறைவன் அருளையும் ஆசியையும் பெற இராமேஸ்வர யாத்திரை மேற்கொண்டு இப்போது வந்திருக்கிறார். நமது மறவர் சீமை மேலும், என்மேலுமுள்ள அன்பைத் தெரிவிக்கவே நடுவழியில் இங்கு நமது விருந்தினராகத் தங்கப்போகிறார். ஐதீகப்படி இராமேஸ்வர யாத்திரை முடிந்து திரும்பும்போதும் மறுபடி இங்கு வருவார். இவருடைய இராமேஸ்வர யாத்திரை ஒரு குறையுமின்றிப் பூரணமாக நிறைவேற நாமும், நமது மறவர் சீமை மக்களும் சகல உதவிகளையும் செய்யவேண்டும்" என்று உருக்கமான குரலில் சபையோர் கேட்கும்படி பகிரங்கமாகக் கணீரென்று முழக்கமிட்டு அறிவித்தார், சேதுபதி. ரங்ககிருஷ்ணனுக்கு இதைக் கேட்டு ஒரே திகைப்பு.