பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

ராணி மங்கம்மாள்

அந்தப் போரிலும் கூட அவர் கைதான் ஓங்கியிருந்தது. தான் ஆத்திரப்படாமல் எதிரியை முதலில் உணர்ச்சிவசப்பட்டு ஆத்திரம் கொள்ளச் செய்கிறவன் அந்தக் கணமே எதிரியும் அறியாமலே அவனை இரகசியமாக வெற்றி கொண்டுவிடுகிறான். ரங்க கிருஷ்ணனைப் பொறுத்தவரை அப்படி ஒரு மனோதத்துவ வெற்றியை ரகுநாத சேதுபதி அடைந்திருந்தார்.

உணவருந்தி முடித்துவிட்டுப் பெண்கள் அலங்காரத் தாம்பாளங்களில் கொணர்ந்து வைத்த கனிவகைகளையும் தாம்பூலத்தையும் தரித்துக்கொள்ள இருந்தபோது, ரங்ககிருஷ்ணன் மறுபடி அவரிடம் வகையாக மாட்டிக் கொண்டான். வாழைப்பழச் சீப்பிலிருந்து ஒரு பழத்தைத் தனியே எடுத்துக் கொண்டு "நன்றாகக் கனியவில்லை" என்றான் ரங்ககிருஷ்ணன்.

"நன்றாகக் கனியாத எதுவுமே இங்கே வராது. உரியுங்கள். கனிந்திருப்பது தெரியும். சில கனிகளைக் கனிந்திருக்கிறதா, இல்லையா என்று கண்டுபிடிக்கக்கூட நமக்கே ஒரு கனிவு தேவைப்படுவதுண்டு சின்ன நாயக்கரே!"

சிரித்தபடியே நகைச்சுவைக்குப் பேசுவதுபோல் பேசினாலும் தனக்கு அரசியல் விஷயங்களைப் பேசும் கனிவு போதாது என்பதைப் பொடிவைத்துச் சொல்லுகிற அவரது அங்கதப் பேச்சு ரங்ககிருஷ்ணனுக்குப்புரிந்து உறைத்தது.

"வாழைத் தாராக அரண்மைனைக்கு வரும்போது இவை கனியாமல்தான் வரும். எப்படியும் நாங்கள் இவற்றைக் கனிய வைத்துவிடுவோம்."

"எப்படியம் கனியவைப்பது என்பது தர்மமாகாது. ஒவ்வொன்றைக் கனிய வைப்பதற்கும் ஒரு முறை இருக்குமே?"

"சில வேளையில் கனிகளைக் கனிய வைப்பதற்கான முறைகளும், தர்மங்களும், மனிதர்களைக் கனிய வைக்கப் போதுமானவையாகவோ பொருத்தமானவையாகவோ இருப்பதில்லை, சின்னநாயக்கரே!"