பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

75

பேசாமல் திரும்பிவிடவும்" என்று மறுமொழி வந்திருந்தது. ரங்ககிருஷ்ணன் உள்ளடக்கிய ஆத்திரத்தோடும் படைகளோடும் வந்தவழியே திரும்ப நேர்ந்தது. வெற்றியா தோல்வியா என்று புரியாமலே போர் முடிந்திருந்தது.

முதலில் திரிசிரபுரத்திலிருந்து புறப்படும் போதிருந்த உற்சாகம் திரும்பும் போதில்லை. பட்டமேற்று முடிசூடிக் கொண்டதும் தொடங்கிய கன்னிப்போரே இப்படிக் காரிய சித்தி அடையாததாகி விட்டதே என்று மனம் கலங்கியது. ரங்க கிருஷ்ணனின் இரண்டு குற்றச்சாட்டுகளையுமே சேதுபதி ஏற்கவுமில்லை. மறுக்கவுமில்லை. இலட்சியமும் செய்யவில்லை. அலட்சியமும் செய்யவில்லை.

குமாரப்ப பிள்ளையின் கொலையைப் பற்றி மிக எளிதாகத் தட்டிக் கழித்துப் பதில் சொல்லிவிட்டார் அவர். முதலில் ஜாடைமாடையாகப் பதில்கள் இருந்தாலும், பின்னால் தொடர்ந்து தங்கியிருந்த சில நாட்களிலும் அப்பேச்சு நிகழ்ந்தபோது நேரடியாகவே ரங்ககிருஷ்ண்னும் கேட்டான். நேரடியாகவே சேதுபதியும் பதில் சொல்லியிருந்தார். பதிலில் பணிவோ பயமோ இருக்கவில்லை.

"குமாரப்பபிள்ளை நாயக்க சாம்ராஜ்யத்தின் கெளரவத்துதராக இங்கு வந்திருந்தது உண்மைதான். அவரது சாவைத் தடுப்பது ஒன்றே சேதுநாட்டின் இலட்சியமில்லை. சேதுநாட்டில் வாழ்ந்தபோது அவர் கொல்லப்பட்டார் என்பதற்காக நானும் வருந்துகிறேன்."

"வருந்தினால் மட்டும் போதாது இதற்கு நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும்."

"கூற்றுவனாகிய யமதர்மராஜன் பதில் சொல்ல வேண்டிய விஷயங்களுக்கு எல்லாம் நான் எப்படிப் பதில் சொல்ல முடியும் சின்னநாயக்கரே!"

"குமாரப்ப பிள்ளையின் கொலைக்கும் சேதுநாடு சுயாதீனம் கொண்டாடுவதற்கும் தொடர்ந்து சம்பந்தம் இருப்பதாக நான் நினைக்கிறேன். இரண்டும் அடுத்தடுத்து நிகழ்ந்திருக்கின்றன."