பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

ராணி மங்கம்மாள்

"நீங்கள் என்னென்ன நினைக்கிறீர்கள் என்றெல்லாம் அநுமானம் செய்துபார்த்துப் பதில் சொல்லிக் கொண்டிருக்க நான் கடமைப்பட்டிருக்கவில்லை சின்னநாயக்கரே!” என்று அந்த உரையாடலை முடித்து விட்டார். சேதுபதி, அவரது முடிவான பதிலே சுயாதீன உரிமையை நிரூபிக்கும் விதத்தில் தான் அமைந்திருந்தது. சம்பிரதாயப்படி இராமேஸ்வர யாத்திரை என்று வந்தால் அதில் பகைமைக்கோ சச்சரவு சண்டைகளுக்கோ இடமில்லை. சமய ரீதியான சம்பிரதாயமும் அரசியல் பகைமையும் ஒன்றோடொன்று ஒத்துப் போவதில்லை. ரங்ககிருஷ்ணன் படையெடுத்து வந்த நோக்கத்தை மறைத்து இராமேஸ்வரத்துக்குத் தீர்த்தயாத்திரை வந்திருப்பதாக மாற்றி நாடகமாடியதிலேயே ஒரு போரை நாசூக்காகத் தவிர்த்துவிட்டார் சேதுபதி, அதே சமயத்தில் பயந்தோ, பதறியோ தவிர்த்ததாகவும் காண்பித்துக் கொள்ளவில்லை. தன் தந்தையார் காலத்திலிருந்தே நாயக்க சாம்ராஜ்யத்துக்குப் பெரிய தலைவலியாக இருந்து வந்திருக்கும் கிழச்சிங்கத்தைத் தானும் அதன் குகைக்குள்ளே போய்ப் பார்த்து விட்டு ஒன்றும் செய்ய முடியாமலே திருப்பிக் கொண்டிருக்கிறோம் என்று உணர்ந்தான் ரங்ககிருஷ்ணன். ஏமாற்றம், சிறிது விரக்தி, உள்ளூற மனவேதனை எல்லாவற்றோடும் திரும்பிக் கொண்டிருந்தான் அவன். இந்தவிதமான துயர நிலைமைகளால் தலை நகரத்துக்குத் திரும்புகிற தொலைவு நீண்டு வளர்வது போலிருந்தது அவனுக்கு.

அவனும் அவனுடன் வந்திருந்த படைகளும் மறவர் சீமை, எல்லையைக் கடந்து வெளியேறுவதற்குள்ளேயே இன்னும் அதிர்ச்சியூட்டக் கூடிய ஒரு செய்தியும் பரவியிருப்பது தெரிந்தது.

ரங்ககிருஷ்ணன் போரிடும் நோக்கத்தோடு வந்து முடியாது என்ற பயத்தோடு தோற்றுத் திரும்பிக்கொண்டிருப்பதாகச் சேதுபதியே மறவர் சீமை முழுவதும் பரவும் படி ஒரு செவிவழித் தகவலை அவிழ்த்துவிட்டிருந்தார். மறவர் சீமையின் மூலை முடுக்குகளிலெல்லாம் அச்செய்தி பரவியிருந்தது. படை திரும்புகிற வழியிலுள்ள பல சிற்றூர்களில் தானே மாறுவேடத்தில் சென்று