பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

7

நதியா என்று மாற்றி நினைக்கும்படி நதிப்பரப்பே கண்ணுக்குத் தெரியாதபடி அவ்வளவு மக்கள் கூட்டம். அரண்மனைச் சேவகர்கள் வழிவிலக்கி இடம் செய்து கொடுத்தும் அந்தப் பெருங்கூட்டத்தினரிடையே ராணி மங்கம்மாளும் இளவரசர் ரங்ககிருஷ்ண முத்துவீரப்பரும் அமர்ந்திருந்த சித்திரப் பல்லக்கு, கீழிறங்க முடியாமல் இருந்தது. பல்லக்குத் தூக்கிகள் எப்படியோ சிரமப்பட்டுப் பல்லக்கை மணற்பரப்பில் இறக்கினர்.

மகாராணியும் இளவரசரும் பல்லக்கிலிருந்து இறங்கினர். அரசியையும், இளவரசரையும் கண்ட மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். நெருக்கியடித்துக் கொண்டு காண முந்தினர். மகிழ்ச்சி ஆரவாரமும் வாழ்த்தொலிகளும் விண்ணை எட்டினாற்போல் முழங்கின. அனைவர் முகமும் பயபக்தியோடு கூடிய மகிழ்ச்சியை அடைந்தன.

இன்னும் இளமை வாடா வனப்பும், காம்பீர்யமும், கட்டழகுமாக ராணி மங்கம்மாள் இறங்கி நின்ற போது அந்த எடுப்பான எழில் தோற்றமே சுற்றி நின்றவர்களிடையே ஒரு பயபக்தியை உண்டாக்கிற்று. கறைதுடைத்த முழுமதி போன்ற ராணியின் அழகும், காம்பீர்யமும் இவள் கணவனை இழந்தவள் என்ற அனுதாப உணர்வை ஏற்படுத்துவதற்குப் பதில் தனது சாதுர்யத்தால் பாலப் பருவத்தைக் கடந்து இப்போதுதான் இளைஞனாகியிருக்கும் ரங்ககிருஷ்ண முத்து வீரப்பனுக்காக நாட்டைக் கட்டிக் காத்து வருகிற தைரியசாலி என்ற பெருமித உணர்வையே உண்டாக்கின.

மிக இளம் வயதாயிருந்தும் அரும்பு மீசையும், எடுத்து அள்ளி முடிந்த குடுமிக் கொண்டையும் ஆஜானுபாகுவான உயரமுமாயிருந்தான் ரங்ககிருஷ்ண முத்துவீரப்பன். அழகில் தாய் மங்கம்மாளையும், உயரத்திலும் ஆஜானுபாகுவான உடலமைப்பிலும், தந்தை சொக்கநாத நாயக்கரையும் கொண்டு விளங்கினான் அவன். தெய்வ தரிசனத்தோடு ராஜ குடும்பத்தின் தரிசனமும் கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்திருந்தது மக்கள் கூட்டம்.

அழகர் ஆற்றில் இறங்கினார். ராணி மங்கம்மாளும், ரங்க கிருஷ்ண முத்துவீரப்பனும் கள்ளழகரின் திருவடிகளைச் சேவித்த