பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

89

இதற்கு அப்போது ரங்ககிருஷ்ணன் கூறிய மறுமொழி அங்கிருந்த அனைவரையுமே துணுக்குறச் செய்தது. திகைத்துப் போய் நின்றார்கள் அவர்கள்.

சமயப்பற்றும் பக்தியும் மிக்கவனான ரங்ககிருஷ்ணனின் மனத்தில் நியாயத்தைக் காட்டிலும் உயர்ந்த தெய்வமில்லை என்ற உணர்வு மட்டுமே அப்போது ஓங்கியிருந்தது. ஆகவே அவர்களிடம் அவன் தார்மிகக் கோபத்தோடு கேட்டான்.

"விக்கிரகங்களைக் கொண்டு போய் வைக்க வேறு இடமில்லை என்றால் காவேரியில் போடுவதுதானே?"

இந்த வார்த்தைகளிலிருந்த சூடும் கடுமையும் உறைத்து இனி இதில் இவனுடைய முடிவு வேறுவிதமாக இராது என்று வந்திருந்தவர்களுக்குப் புரிந்ததும் தயங்கி நின்றனர் அவர்கள்.

அவர்களிடம் ரங்ககிருஷ்ணனே மேலும் தொடர்ந்தான்.

"ஏதடா அபசாரமான வார்த்தைகளைப் பேசுகிறானே என்று நினைக்க வேண்டாம். உண்மையை விட உயர்ந்த தெய்வமில்லை என்பது எல்லாச் சமயங்களும் ஏற்கிற உண்மை. பெரும்பாலானவர்கள் ஒன்று சேர்ந்து செய்திருக்கிறார்கள் என்பதனால் ஒரு தப்பான காரியம் நியாயமாகிவிடாது. சிறுபான்மையோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதனால் ஒரு நியாயத்தைப் புறக்கணித்துவிட முடியாது."

"ஆனால் அரசரின் இந்த முடிவால் பெரும்பாலான பக்தர்களின் மனஸ்தாபத்தைத்தான் எதிர்பார்க்க முடியும்" என்று சற்றே துணிவுடன் ஆரம்பித்தார் வந்தவர்களில் ஒருவர். துணிந்து வாய்திறந்து விட்டாலும் பயந்து கொண்டேதான் பேசினார் அவர்.

"நீதி நியாயங்களில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு விதம், சிறுபான்மையோருக்கு மற்றொரு விதம் என்று பார்க்க முடியாது."

தீர்மானமாக இப்படி அவர்களுக்கு மறுமொழி கூறி அனுப்பினான் ரங்ககிருஷ்ணன். அவனுடைய தீர்ப்பின் நடுநிலைமைப் பண்பையும், நியாயத்தையும் தாய் மங்கம்மாள் பாராட்டினாள்.