பக்கம்:இருட்டு ராஜா.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்59

 பிறகு உப்புமா தின்னு, காப்பி குடித்துவிட்டு, மிகுந்த மகிழ்ச்சியோடு பாராட்டினான். “தனபாக்கியம், உன் பழையகதை எப்படியும் இருந்து விட்டுப் போகட்டும். அதை நான் மறந்திட்டேன். என்னைப் பொறுத்த வரையிலே நீ நல்லவ. புதுசா வேலைக்கு வந்திருக்கிறே, அவ்வளவுதான். நீ உன் பழைய கதையை இந்த ஊரிலே யாருகிட்டேயும் சொல்லிக்கிட்டிருக்க வேண்டியதில்லே. அதனாலே நன்மை எதுவும் ஏற்படாது.உனக்குத் தேவையானது எதுவாக இருந்தாலும், அவ்வப்போது நீ என் கிட்டே கேட்டு வாங்கிக்கிடலாம். இந்த வீட்டை விட்டு எப்போ போகணுமினு தோணினாலும், என்னிடம் சொல்லிக்கிட்டே போகலாம். என்னாலே உனக்கு ஒரு தீங்கும் ஏற்படாது” என்று உறுதியாகக் கூறினான்.

அவளுக்குக் கண்களில் நீர் சுரந்தது. அவள் நன்றிப் பெருக்கோடு அவன் முன்னே விழுந்து கும்பிட்டாள்.

“சேச்சே என்ன தனபாக்கியம் இது!” என்று அவன் தடுமாறினான்.

இந்த விதமாகத்தான் அவர்களது தொடர்பு ஆரம்பித்தது. வெகு விரைவிலேயே நெருக்கமான உறவாகப் பின்னிப் பிணைந்து கொண்டது. அதற்காக அவனோ அவளோ வருத்தப்படக் கூடிய சந்தர்ப்பம் இதுவரை ஒன்று கூட ஏற்படவில்லை.

அவர்கள் இரண்டு பேரும் எட்டு வருஷங்களாகச் சேர்ந்து வாழ்கிறார்கள் அவர்களுக்குக் குழந்தை எதுவும் பிறக்கவில்லை. அதற்காக அவர்கள் வருத்தப்படவுமில்லை.

இதை அறிந்ததும், “முத்துமாலை பெரிய ஆளுதான். உண்மையிலேயே ரொம்பப் பெரியவன்” என்று தங்கராசு தனக்குள் சொல்லிக் கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/61&oldid=1139119" இலிருந்து மீள்விக்கப்பட்டது