பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

இரத்தம் பொங்கிய

இந்த வையகம் வலிவுள்ளவனுக்கே! எவன் வலிவுள்ளவன் என்பதனை அவ்வப்போது எடுத்து விளக்கியாக வேண்டி நேரிட்டுவிடுகிறது; போர் அக்காரணம் பற்றியே தேவைப்படுகிறது; போரின்போது வலிவு மிக்கவன் வாகை சூடுகிறான்; ஆற்றல் அற்றவர்கள் அடிபணிகின்றனர்; அவனிக்குப் புதிய தோர் ஆற்றலரசு கிடைக்கிறது — போரின் விளைவு இஃதே என்று கூறுவோரின் தொகை மிகக் குறைந்துபட்டுவிட்டது. உள்ளனர், இப்போதும் ஒரு சிலர்—போர் தவிர்க்க முடியாதது — என்று கூறி! தேவைப்படுகிறது என்றுகூடக் கூறமுனைவர், அறிவுத் தெளிவு பெற்றநிலை இன்று அவனியில் இல்லாதிருந்தால்.

போரற்ற, புகைச்சலற்ற ஓர் உலகு, பொன்னுலகாகும்—ஐயமில்லை!

மலர்தரும் செடி கொடிகளும், கனி தரும் மரங்களும் கொண்டதாகவே தோட்டங்கள் இருத்தல் வேண்டும் — பூங்காக்கள் கொண்டதாகவே புவி இருக்க வேண்டும் என்று விரும்புவதும்: கூறுவதும், தவறு அல்ல—அந்த நிலைக்காகப் பாடுபடுவது தேவையானதுங்கூட! ஆனால் மலர்த்தோட்டத்துக்குப் பக்கத்திலே கள்ளிக் காளான் முளைத்துவிடுகிறது—— பக்கத்திலா?— தோட்டத்திலேகூட!! என்ன செய்யலாம்? கனி குலுங்கும் மரத்தைக் கருமந்தி பிடித்தாட்டுகிறது: கடுங் காற்றுக் கிளப்பி மரங்களைப் பெயர்த்தெடுத்து விடுகிறது!! என் செய்வது?

கேடுகள் முளைக்கும்போது, அவற்றினை எதிர்த்து வீழ்த்தி, நல்லனவற்றைப் பாதுகாத்துத் தீர வேண்டும்!

அது மட்டும் போதாது— கேடுகள் மீண்டும் எழாதபடி, பாதுகாப்பு ஏற்படுத்திக் கொண்டாக வேண்டும்.

இது தேவையானதுதான் —— இதனை வற்புறுத்த, விளக்கம் அளிக்க, இதற்கு ஆதரவு திரட்டிடத் தேவையா—— எவரும் இசைவரே என்று கூறத்தோன்றுகிறது. ஆனால் இதிலே உள்ள சிக்கல் யாதெனில், களைந்தெறியப்பட வேண்டிய கேடு எது——என்ன இலக்கணம் கண்டு ஒன்றினைக் கேடு என்று சொள்ள முடிகிறது என்பதுதான்.