பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

இறுமாப்புள்ள இளவரசி


 மக்கெளல் வெகுதுரத்திற்கு அப்பால் எதையோ கவனித்துவிட்டு, "அவன் வருகிறான்! டங்கன்னான் அருகில் அவன் உருவம் தெரிகிறது!" என்றான்.

"யாரவன்? கடவுள்தான் நம்மைக் காக்க வேண்டும்!”

"அவன்தான் குகுல்லின்! எப்படிச் சமாளிப்பது என்று ஒன்றும் புரியவில்லையே!, நான் ஒடிப் போய்விட்டால் கேவலம்; என்றாவது ஒரு நாள் அவனைச் சந்திக்காமலும் முடியாது!"

"அவன் இங்கே எப்பொழுது வந்து சேருவான்?"

"நாளை, சுமார் இரண்டு மணிக்கு"

"நாதா, கவலைப்பட வேண்டா! என்னை நம்புங்கள். இந்தச் சிக்கலில் என்னால் முடிந்ததைச் செய்து நாம் தப்பித்துக்கொள்ள வழி செய்கிறேன். நீங்கள் வழக்கம் போல் விரலைக் கடித்துக்கொண்டு தனியாக இதிலே வெற்றி பெறுவது கடினம்!"

மனைவியின் சொற்கள் மக்கெளலுக்குச் சற்றே ஆறுதலளித்தன. ஊனாக் கெட்டிக்காரி. அவளுக்கு வன தேவதைகள் எல்லாம் பழக்கம். ஒரு வேளை, அவளே ஒரு தேவதைதானோ என்றுகூட அவளுடைய கணவன் ஐயுறுவதுண்டு. அவள் தேவதையானாலும் நல்ல தேவதை என்பது அவன் எண்ணம்.

ஊனாக்குக்கு ஒரு சகோதரி இருந்தாள். அவள் பெயர் கிரானுவா. அவள் எதிர்ப்புறமிருந்த குல்லமோர் மலையின் உச்சியில் குடியிருந்து வந்தாள். இந்த மலையைப்பற்றி முன்னரே கூறப்பட்டிருக்கிறது. நாக்மேனிக் குன்றுக்கும் அதற்கும் இடையிலுள்ள அழகான பள்ளத்தாக்கு சுமார் மூன்று அல்லது நான்கு மைல் நீளம் இருக்கும் ஊனாக்கும் அவள் சகோதரியும் தங்கள் மலைகளின் உச்சியிலிருந்து பேசிக்கொள்வது வழக்கம்.

இந்தச் சமயத்திலும் ஊனாக், சகோதரியின் பெயரைச் சொல்லிக் கூவினாள். கிரானுவா தான் அடிவாரத்தில் கனிகள் பறித்துக்கொண்டிருப்பதாகக் கூறினாள். உடனே அவளை மலை உச்சியில் ஏறும்படி ஊனாக் வேண்டினாள். அந்தப்படியே அவளும் ஏறி நின்றாள்.