பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74 இறையனார் அகப்பொருள் (களவு

ஆயின், இருவரும் உள்வழி அவன் வரவு' என்று ஆகாதன்றே, அவன் செலவு என்றதன்றி என்பது ;
என்னை ,

'தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும்
தன்மை முன்னிலை ஆயீ ரிடத்த.' (கிளவியாக்கம்-29)

' ஏனை இரண்டும் ஏனை யிடத்த.' (கிளவியாக்கம்-30)

என்றாராகலின்.
அஃது அறியாது சொன்னாய்,

'செலவினும் வரவினுந் தரவினுங் கொடையினும்.' (கிளவி-28 )

என்னுஞ் சூத்திரத்துள், இலேசினான் முடியுமாகலான் அமையும் ;

அதுவாகலினன்றே ,

' தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது.' (அகம்- 36)

என்று சான்றோர் சொல்லியது என்பது.

சூத்திரம் - 8



ஆங்குணர்ந் தல்லது கிழவோள் தேஎத்துத்
தான்குறை உறுதல் தோழிக் கில்லை.

என்பது என்னுதலிற்றோ எனின்,
இதுவும் தோழிக்குரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள் :
ஆங்கு உணர்ந்தல்லது என்பது - அங்ஙனம் அறிந்த பின்றை யல்லது என்றவாறு ;
கிழவோள் தேஎத்து என்பது - தலைமகள் மாட்டு என்றவாறு ;
தான் குறை உறுதல் தோழிக்கு இல்லை என்பது - தான்குறையுற்று முடிப்பல் என்னுஞ் சொல் தோழிக்கு இல்லை என்றவாறு.

எனவே, என் சொல்லப்பட்டதாம் எனின்,
கரவு நாட்டம் வேண்டுவாரையும் மறுக்கப்பட்டதாம்.
அஃதே யெனின்,
'குறையுறுதல் தோழிக்கு இல்லை' என அமையாதோ,
'தான்' என்றது எற்றிற்கோ எனின்,
பின்னையும் தான் அல்லள் குறை நயப்புக் கூறுவாள், அவனது ஆற்றாமையைத் தன்கட் கொண்டு நின்றமையால் அவனே யெனப்படும்.