பக்கம்:இலக்கண வரலாறு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60


தொல்காப்பியரின் மரபியல் கட்டொழுங்கு மரபியலிலேயே அமைந்து கிடத்தல் திட்டமிட்ட திணிப்பு என்பதை உறுதிப் படுத்துகின்றது.

‘மாற்றருஞ் சிறப்பின் மரபியல்’ என்று மரபிலக்கணம் கூறி மரபியலைத் தொடுக்கும் அவர் இளமைப் பெயர், ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர் ஆகியவற்றைக் குறிக்கிறார். அக்குறிப்பொழுங்குப்படியே இளமைப் பெயர்கள் இவை இவை. இவ்விவற்றுக்குரிய என்பதை விளக்கி முடித்து,

“சொல்லிய மரபின் இளமை தானே
சொல்லுங் காலை அவையல திலவே”

என நிறைவிக்கிறார். அடுத்து ஓரறிவு உயிரி முதல் ஆறறிவுடைய மாந்தர் ஈறாக ஆண்பால் பெண்பால் பெயர்களை விளக்க வரும் அவர் ஓரறிவு தொடங்கி வளர்நிலையில் கூறி எடுத்துக்காட்டும் சொல்லி ஆண்பாற் பெயர்களையும் பெண்பாற் பெயர்களையும் இவை இவை இவற்றுக்குரிய என்பதை விளக்கி நிறைவிக்கிறார்.

ஆண்பால் தொகுதி நிறைவுக்கும் பெண்பால் தொகுதித் தொடக்கத்திற்கும் இடையே

“ஆண்பா லெல்லாம் ஆணெணற் குரிய
பெண்பா லெல்லாம் பெண்ணெனற் குரிய
காண்ப அவையவை அப்பா லான”

என்கிறார். பின்னர்ப் பெண்பாற் பெயர்களைத் தொடுத்து முடித்து,

“பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே”

என்று இயல் தொடக்கத்தில் கூறிய பொருளெல்லாம் நிறைந்த நிறைவைச் சுட்டுகிறார். ஆனால் இயல் நிறைவுறாமல் தொடர்நிலையைக் காண்கிறோம். எப்படி?

“நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/105&oldid=1471421" இலிருந்து மீள்விக்கப்பட்டது