பக்கம்:இலக்கண வரலாறு.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

111


மாயின் எண்ணிய மூன்றனையும் தொகுத்தவாறே பிறிதில்லை” என்கிறார் (செய். 1). இவ்வாறு பாடம் கூறலும் பேராசிரியர் உரைமுறைகளுள் ஒன்றாம்.

வேற்றுமை கூறுதல்:

வேற்றுமை கூறுதலையும் ஒரு நெறியாகப் பேராசிரியர் கொண்டுள்ளார். அவற்றுள் ஒன்று: "குடிமையொடு பிறப்பிடை வேற்றுமை என்னை எனின், பிறப்பென்பது குடிப்பிறத்தல்; அதற்குத்தக்க ஒழுக்கம் குடிமை எனப் படும்” என்கிறார் (மெய்ப். 25).

மறுப்புரை:

மறுப்புக் கூறுதல் பேராசிரியர் உரையில் தனிச் சிறப்புடையது. மிக விரிவாக ஆய்ந்து படிப்படியாக விலக்கியும் விளக்கியும் மறுத்து ஆசிரியர் கோளை நிலைநாட்டல் அவர்தம் முறைமை.

தளை என்பதோர் உறுப்புக் கொள்வாரை மறுத்துரைத்தல் அதற்கொரு சான்றாம் (செய். 1).

பிறருரை:

தாம் உரைக்கும் மரபுவழி உரைக்கு வேறுவகையாலும் உரைகூறுவாரை ‘இன்னொரு சாரார் இவ்வா றுரைப்ப’ என்பார் பேராசிரியர் (செய். 11). ஆசிரியர் கூறும் இவ்விலக்கணம் பிறரால் இப்பெயரால் கூறப்படும் என்பதையும் சுட்டுதல் பேராசிரியர் உரைமுறைகளுள் ஒன்று. வட நூலாசிரியர் வழிமுறை இன்னதெனக் காட்டலும் உண்டு.

அசையும் சீரும் இசையொடு சேர்த்துதல் என்பதை வகையுளி என்று பிறர் கூறுவதைச் சுட்டுதல் முன்னதற்கு எடுத்துக்காட்டாகும் (செய். 11). குரு, இலகு என்பவற்றைச் சுட்டிப் பிரத்தாரம் முதலாக எடுத்துக்காட்டுவது பின்னதற்குச் சான்று (செய். 31).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/156&oldid=1471513" இலிருந்து மீள்விக்கப்பட்டது