பக்கம்:இலக்கண வரலாறு.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27. சிதம்பரச் செய்யுட்கோவை


பாண்டி நாட்டுப் பெரும்புலவர் குமரகுருபரரால் இயற்றப்பட்டது இக்கோவை. இக்கோவை மற்றைச் ‘கோவை நூல்’ போல்வது அன்று என்பதைச் ‘செய்யுட் கோவை’ என்னும் பெயர் விளக்கும். செய்யுள் வகை, அதன் இனவகை பற்றி எடுத்துக் காட்டாகச் சொல்லப்பட்ட நூல் இது. ‘இலக்கியம்’ எனத்தக்க பொருள் அமைதியுடைய இந்நூலின் உரை விளக்கம் இலக்கணச் சிறப்புடையது. இதனை இயற்றியவரும் நூலாசிரியரே.

நூல் தோற்றம்

பாப்பாவினம் என்பது மாலியச் சமயம் சார்ந்தமை போல இது சிவனியச் சமயம் சார்ந்தது. யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை என்பவை அருகபரப் பொருள் அமைந்த எடுத்துக்காட்டுகளை யுடைமையால் தத்தம் சமயச் சார்புக்குத் தக எழுத்துக்காட்டுகளைத் தந்து நிறுவும் எண்ணத்தால் இத்தகு நூல்கள் தோற்றமுற்றன எனக் கொள்ளலாம்.

வரலாறு

ஆசிரியர் குமரகுருபரர் திருவைகுண்டத்தில் பிறந்தவர். தந்தையார் சண்முக சிகாமணிக் கவிராயர். அன்னையார் சிவகாம சுந்தரியார். பிறந்து ஐயாண்டனவும் பேசா திருந்து, செந்தில் முருகன் அருளால் பேசுந்திறத்தோடு பாடுத்திறமும் பெற்றுக் கந்தர் கலிவெண்பா முதல் சகல கலாவல்லி மாலை ஈறாகப் பல நூல்களை இயற்றியவர். காசி வேந்தனைக் கண்டு தம் திறத்தால் மடம் நிறுவியவர். திருமலை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் மதுரைக்கு வந்து மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம் ஆகியன இயற்றியவர். இவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/403&oldid=1474411" இலிருந்து மீள்விக்கப்பட்டது