பக்கம்:இலக்கண வரலாறு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 
1. இலக்கண வரலாறு

இலக்கணம் என்பது பழந்தமிழ்ச் சொல். அது தொல்காப்பியத்தில் பல் கால் இடம் பெற்றுள்ள சொல்.

“புறத்திணை இலக்கணம்” (1002)
“இழைபின் இலக்கணம்” (1498)

என இலக்கணச் சொல்லாட்சிகளைச் சுட்டுகிறார் தொல்காப்பியனார்.

“செய்யுள் மருங்கின் மெய்பெற நாடி
இழைத்த இலக்கணம்"
(1499)

என்றும்,

"ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்
ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும்
வழக்கின் ஆகிய உயர்சொற் கிளவி
இலக்கண மருங்கின் சொல்லா றல்ல"
(510)

என்றும், இலக்கணச் சொல்லாட்சி மேற்கொள்கிறார்.

இலக்கணம் என்பது ‘இலக்கு அண் அம்’ என்னும் முப்பகுப்பு ஒரு சொல். இலக்கு என்பது குறி. "இலக்கம் உடம்பு இடும்பைக்கு" என்பது திருக்குறள் (627). 'அண்ணுதல்', நெருங்குதல். 'அம்' என்பது பெருமைப் பொருள் ஈறு.

குறி என்பதே இலக்கணப் பொருள் தருவது என்பதும் இவண் எண்ணத் தக்கது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/46&oldid=1474540" இலிருந்து மீள்விக்கப்பட்டது