பக்கம்:இலக்கண வரலாறு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

எடுத்துக் கொள்வதுபோல் எடுத்துக் கொள்ள வாய்த்தது தொல்காப்பியம். அதனையே பாயிரம் முறைப்பட எண்ணிப் புலம் தொகுத்ததாகக் குறிக்கின்றது.

எழுத்து சொல் பொருள் என்னும் மூன்றதிகாரங்களைக் கொண்ட தொல்காப்பியம் ஒவ்வோர் அதிகாரத்திற்கும் ஒன்பது ஒன்பது இயல்களைக் கொண்டிருத்தல் அதன் கட்டமைதிச் சிறப்புக் காட்டுவதாம்.

“ஆயிரத்தின் மேலும் அறுநூற்றுப் பஃதென்ப
பாயிரத்தொல் காப்பியங்கற் பார்”

என்பது தொல்காப்பிய நூற்பா அளவினைக் கூறுவதொரு வெண்பா. ஆனால் உரையாசிரியர்களின் அமைப்புப்படி 1595 முதல் 1611 நூற்பா வரை பல்வேறு எண்ணிக்கை யுடையதாய் அமைந்துள்ளன. இக்கணக்கீடும் தொல்காப்பியர் சொல்லியதோ, பனம்பாரனார் குறித்ததோ அன்று. உரையாசிரியர்களின் காலத்தவரோ அவர்களின் காலத்திற்கு முன்னே இருந்த மூல நூற்பா எல்லையில் கணக்கிட்டறிந்த ஒருவரோ கூறியதாகலாம்.

தொல்காப்பிய அடியளவு 3999 என்று அறிஞர் வ. சுப. மாணிக்கனார் (தொல்காப்பியக்கடல் பக். 95) எண்ணிக் கூறுவர். ஏறக்குறைய 5630 சொல் வடிவங்கள் தொல்காப்பியத்தில் உள்ளமையையும் கூறுவர். அவர் “தொல்காப்பிய இலக்கணத்தைக் காண்பதற்குத் தொல்காப்பியத்தையே இலக்கியமாகக் கொள்ளலாம். தன்னைத் தானே விளக்கிக் காட்டுதற்குரிய அவ்வளவு பருமனுடையது தொல்காப்பியம்” என்று வாய்மொழிகின்றார்.

முப்பகுப்பு :

தனியெழுத்துகள், சொல்லில் எழுத்தின் நிலை, எழுத்துப் பிறக்கும் வகை, புணர் நிலையில் எழுத்தமைதி என்பவற்றை விரித்துரைப்பது எழுத்ததிகாரம். நூன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/91&oldid=1471405" இலிருந்து மீள்விக்கப்பட்டது