பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1. இலக்கியத்தின் நோக்கங்கள்

தோற்றுவாய்

அறிஞர்தம் அறிவுத் தெளிவிலிருந்து, சிந்தனைச் சுடரிலிருந்து, கருத்து அலைகளினின்று வெளிப்போந்த அமர காவியங்களே இலக்கியங்கள். இந்த இலக்கியங்கள் மக்கள் வாழ்க்கையினின்றும் முகிழ்த்தெழுந்த வாழ்க்கை வெளிப்பாடுகளும் காலத்தின் சுவடுகளும் எனலாம். வாழ்க்கையின், காலத்தின் பிரதிபலிப்புக்களான இவற்றின் நோக்கங்கள் பற்றிக் காண்போம்.

இலக்கியத்தின் நோக்கங்கள்

அறிவு வளர்ந்து கொண்டு போனால் மட்டும அவனி உய்ந்துவிட முடியாது. சிறந்த மராத்தி நாவலாசிரியர் காண்டேகர், ‘அறிவைக் கொண்டு வாழுபவனின் வாழ்க்கை வேலமரம் போன்றது; அஃது அருகில் வருபவருக்கு நிழல் தராது. அம்மட்டோடு இல்லை; அதனுடைய கூரிய முட்கள் நிழலுக்கு வருபவனின் காலில் எப்போது தைக்குமோ அதனையும் சொல்ல முடியாது’ என்கின்றார். எனவே அறிவுமட்டும் வளர்ந்தால் நெஞ்சம் நிலை திரிந்து பல நீசச் செயல்கள் நித்தமும் நிலையில்லா இவ்வுலகத்தில் நிகழ ஏதுவாகும். அறிவும் நெஞ்சமும் இரு புகை வண்டித் தண்டவாளங்களைப் போன்றன. எங்கேயாகிலும் தனது