பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங் கண்ட காவலர் 59



பலகால் கண்டு பழகுதலும் வேண்டுவதின்று; இருவர் உள்ளமும் ஒன்றுபட்டால் அதுவே போதும் என்ற அரிய கருத்தினைக் கொண்ட

     “புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
      நட்பாம் கிழமை தரும்”

என்ற திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர், “இவ்விரண்டுமின்றிக் கோப்பெருஞ் சோழனுக்கும் பிசிராந்தையார்க்கும் போல உணர்ச்சி ஒப்பின், அதுவே உடனுயிர் நீங்கும் உரிமைத்தாய நட்பினைப் பயக்கும்,” என விளக்கவுரை எழுதிக், கோப்பெருஞ் சோழனின் நட்பின் பெருமையினை நாடறியச் செய்துள்ளமை அறிக.

கோப்பெருஞ் சோழன், கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூதநாதனார், புல்லாற்றுார் எயிற்றியனார், பொத்தியார் போன்ற புலவர் பெருமக்கள் போற்ற, உறையூர்க்கண் இருந்து உலகாண்டிருந்தான். அப்போது பாண்டிய நாட்டில், பிசிர் என்னும் ஊரில், ஆந்தையார் என்ற பெயருடைய புலவர் வாழ்ந்திருந்தார். அவர் வாழ்ந்த பாண்டிய நாடு, அறமல்லன அற்று, அறம் விளங்கும் நாடு ஆதலாலும், அவர் ஊர், ஆன்று அவிந்து அடங்கிய சான்றோர் பலர் வாழும் சிறப்புடையது ஆதலாலும், அவர் வீடு, மனைமாட்சியிற் சிறந்த மனையாளையும், அறிவன அறிந்த மக்களையும், குறிப்பறிந்து கடனாற்றும் ஏவலர்களையும் பெற்றுள்ளமையாலும், கவலையற்ற