பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேலன் விடுத்த தூதன்

95

வேலன் தூது விடுத்தல்

வானவரைக் கொடுஞ் சிறையில் இட்ட அசுரர் கோமானாகிய சூரனது உயிரைக் கவருதற்கு வந்த வடிவேல்முருகன், முதலில் ஒரு தூதனை விடுத்து அவனது கருத்தை அறிய விரும்பினான். அச் சூரனுடன் வீரப் போர் தொடங்கு முன்னே ஆற்றல் மிக்க தூதன் ஒருவனை அனுப்புதலே அறநெறியாகும் என்று மலரவனும் மாயவனும் கூறினர் அது கேட்ட வேல் வீரனாகிய முருகன் அருகே நின்ற வீர வாகுவை அருளொடு கோக்கினான். “வீரனே! நீ மகேந்திர நகருக்கு இன்றே விரைந்து சென்று சூரனைக் கண்டுவரல் வேண்டும்; அவன்பால் இந்திரன் மைந்தனையும் ஏனைய வானவரையும் உடனே சிறையினின்று விடுவித்தல் வேண்டும் என்றும், அறநெறி வழுவாமல் அரசாள வேண்டும் என்றும் அறிவிப்பாய்; அசுரர் கோன் அதற்கு இசையானாயின் அவன் இனத்தை அடியோடு அழித்தற்கு வடிவேல் எடுத்து நாளையே நாம் போருக்கு வருவோம். இஃது உண்மையென்று உரைத்து மீள்க” என் பணித்தருளினான்.

வீரவாகு வீரமகேந்திரம் அடைதல்

வேலன் ஆணையைச் சிரமேல் தாங்கிய வீரவாகு, இந்திரன் முதலிய தேவரிடம் விடைபெற்றுக் கடற் கரையின் அருகமைந்த கந்தமாதன மலையின்மீது ஏறினான். அம்மலையின் உச்சியில் நின்று முருகப் பெருமான் திருவடியைத் தொழுது தியானித்தான். வானவர் கண்டு வியக்கும் பேருருவைக் கொண்டான். சூரனது நகரமாகிய வீரமகேந்திரத்தின் மீது பாயத் துணிந்து காலையூன்றினான். வேலனை வாழ்த்தி