பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

இலக்கியத் தூதர்கள்

நம்மைச் சிறிதும் மதித்திலன்; அவன் இழித்துரைத்த மொழிகளைக் கூற என் நா எழவில்லை ; வஞ்சி நாட்டுப் படை இன்றே நெல்லையை நோக்கிப் புறப்படும் என்றும் அவன் வீறுடன் கூறினான்” எனச் சொல்லி யகன்றான்.

பலதேவன் இடைத்தூதன்

இங்ஙணம் குடிலன் கூறிய கருத்துக்களை அவன் கூறியவாறே கூறிச் சேரன் சீறியெழுமாறு செய்து வந்த பலதேவன், கூறியது கூறுவானாகிய இடைத் தூதனுக்கு ஏற்ற சான்றாக விளங்குவதை மனோன்மணிய நூலால் அறிகின்றோம். இவ்விடத்துக் குடிலன் வாயிலாகத் தூதர் இலக்கணத்தை எடுத்துரைக்கும் நூலாசிரியர், வள்ளுவர் உள்ளத்தைத் தெள்ளிதின் உணர்ந்து சொல்லுவதைக் கண்டு மகிழலாம்.

“வினை தெரிந்து உரைத்தல் பெரிதல, அஃது
தணைநன் காற்றலே ஆற்றல், அதனால்,
அன்பும் குடிமைப் பிறப்பும் அரசவாம்
பண்பும் அறிவும் பரவுநூல் உணர்வும்
தூய்மையும் மன்னவை யஞ்சாத் திண்மையும்
வாய்மையும் சொல்லில் வழுவா வன்மையும்
துணிவும் காலமும் நளமுந் துணியுங்
குணமும் மந்திரத் தலைவர் துணைமையும்
உடையனே வினையாள் தூதன்என்(று) ஓதினர்.”