பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

இலக்கியத் தூதர்கள்

எதிர்கொண்டு வரவேற்க, அடியவராய சுந்தரர் நறுமணப் பொருள்களும் கன்மணிப் பூண்களும் பொன்னவிர் ஆடைகளும் பரிசனம் ஏந்திச் செல்ல இனிது கடந்து சென்றார். இவரது வருகையை எதிர்நோக்கிய பரவையாரும் தம் திருமாளிகையை அணி செய்து நெய்விளக்கும் நிறைகுடமும் நறுந்தூபமும் நிரைத்து வைத்தார். வீதியிற் பூவும் பொற் சுண்ணமும் வீசிப் பாவையர் பலர் பல்லாண்டிசைத்துச் சுந்தரரை வரவேற்கப் பரவையாரும் மாளிகையின் மணிவாயில் முன்பு வந்து அன்போடு எதிரேற்றார்.

சிரிந்தவர் கூடினர்

வன்றொண்டர் தம் வாயிலில் வந்து நின்றபோது கண்ட பரவையாரின் உள்ளத்தில் காதல் வெள்ளம் கரைபுரண்டது. நாணும் அச்சமும் பெருகக் கரங் கூப்பிக் கணவரை வணங்கினார். சுந்தரரும் அவர் சேந்தளிர்க் கரம்பற்றிச் சந்தமுற மாளிகையுட் சார்ந்தார். இருவரும் தம்பிரான் திருவருள் திறத்தைப் போற்றி மகிழ்ந்து இன்ப வெள்ளத்துள் இனிது மூழ்கினர். ஒருவருள் ஒருவர் மேவும் நிலைமையில் இருவரும் உயிர் ஒன்றேயாயினர். பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ ?

சிவபிரான் தலைத் தூதர்

இவ்வாறு தம்பிரான் தோழராய சுந்தரருக்குக் காதல் தூதராய்ப் பரவையார் மனைக்கு நள்ளிருளில் இருமுறை கடந்து சென்று அவர்களை ஒன்று சேர்க்க முயன்ற சிவபிரான் திருவருள் திறத்தை என் னென்பது !