பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிட்டியுள்ள 'நிலை குறித்து கருத்து மாறுபாடுகள் இருக்கின்றன.

தமிழ் - தனிப்பட்டியலில் வந்ததேன்? கல்வித் துறையில் சேர்க்காமல் பண்பாட்டுத் துறையில் வைத்ததேன்? என்றெல்லாம் வினாக்கள் எழுப்பப்படுகின்றன. எந்தப் பட்டியலில் இருந்தாலும், எந்தத் துறையில் இருந்தாலும் நம் எதிர்பார்ப்பு - தமிழ் வளர்ச்சி நிறைவேற வேண்டும் என்பதே நம் வேட்கை. மைய அரசு காலம் கடத்தாமல் விளைவுகள்' உண்டாக்க வேண்டும்.


கட்டுரையின் தொடக்கத்தில் இரண்டு செய்திகள் என்றோம். ஒன்று பற்றிய விளக்கமே மிக நீண்டு போயிற்று. ஆயினும் முற்றிலும் எழுதவில்லை (நூல் வடிவில்தான் எழுத முடியும்). மற்றொன்று பற்றி இப்போது பார்ப்போம். இதுதான் நம் மனத்தை மிகவும் உறுத்தி வருகிற - வருத்தி வருகிற செய்தி. கூட்டத்தில் எழுந்து 'சத்தம் போடலாமா?, 'தட்டிக் கேட்கலாமா?', 'சுட்டிக் காட்டுவோமா?’ என்றெல்லாம் மனம் கிடந்து துடிக்கும். ஆனாலும் அவை நாகரிகம், பண்பாடு கருதி நம்மை நாமே அடக்கிக் கொண்டு வருகிறோம்.


தமிழ் அறிந்தவர்கள், தமிழ் கற்றவர்கள், தமிழ் அறிஞர்கள்(!), மேதையர்(?) பலரும் இப்படிப் பேசுகிறார்கள். எப்படி? .

"மெல்லத் தமிழினிச் சாகும் என்று பாரதி பாடினார். அந்த நிலை விரைவில் வரப் போகிறது. ஐ.நா. பேரவை ஆய்வு சொல்கிறது... இன்னும் ஐம்பதாண்டுகளில் அழியப்போகும் மொழிகளுள் தமிழும் ஒன்று” என்று பேசுகிறார்கள். -

"மெல்லத் தமிழினிச் சாகும் என்று பாரதி சொன்னானே... அந்த நிலை வந்து கொண்டுள்ளது. அவன் கூற்று மெய்யாகி வருகிறது” என்று பேசுகிறார்கள்.

"மெல்லத் தமிழினிச் சாகும் என்று பாரதிப் பாவலன் பாடியது சரியாய்ப் போய்விட்டது. அந்தத் திசை நோக்கி நாம் போய்க் கொண்டிருக்கிறோம்” என்று பேசுகிறார்கள்.

தமிழ்நாட்டில் பிறமொழி மேலாண்மை பெருகிவிட்டது. தமிழன் தமிழில் பேசுவதில்லை; தமிங்கிலம் பேசுகிறான்.


இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005 ◯ 41