பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

11



பூநேராகத்தான் பூக்க வேண்டும். கரும்பு நேராகத்தான் வளர வேண்டும் என்றெல்லாம் நாம் எதிர் பார்க்கிறோம். ஏனென்றால் அவை நேராக இருந்து நேர்த்தியான காட்சியைத் தருகிறது என்பதால்தான்.

பூவின் முதல் தோற்றமான அரும்பு வளைந்து வந்தால், முளைத்து நின்றால் என்ன ஆகும்? அதன் வாசம் போகுமோ? போய்விடாது என்பது நமக்குத் தெரியும்.

கரும்புக் காட்டிலே விளையும் கரும்பு, கோணலாக வளர்ந்து விட்டால் என்ன ஆகும்? சுவை கசப்பாகிவிடுமோ! அல்லவே! அவை இனிக்கும் ரசமாகி, பிறகு மணக்கும் வெல்லமாகிப் போகும். அதன் கோணலில் எந்தக் கோளாறும் இல்லை. தேனாறுதான் இருக்கிறது.


அதைப் போலவே இரும்பையும் பார்க்கலாம். இரும்பு வளைய வளைய, அதன் தோற்றம் மாறலாம். ஆனால் வலிமை குறையாது.


அரும்பு கோணிடில் அதன் மணம் குன்றுமோ கரும்பு கோணிடில் கட்டியும் பாகுமாம்! இரும்பு கோணிடில் யானையை வெல்லலாம்! நரம்பு கோணிடில் நாம் அதற்கு என்ன செய்வோம்:


விவேக சிந்தாமணி எனும் சிறிய நூல் ஒன்று தருகின்ற பாட்டில்தான் எத்தனை அர்த்தங்கள் அமிழ்ந்து கிடக்கின்றன. அரும்பு, கரும்பு, இரும்பு, நரம்பு என்று அடுக்கு மொழியில் இந்தப் பாட்டு எளிதாக மட்டும் அமைந்து விடவில்லை. அதில் நமது துறையான தேகமும், நளினமாக இடம் பெற்றிருப்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். வேடிக்கையாகப் பூவின் கோணலைப் பார்க்கலாம். கரும்பின் சாய்வைக் காணலாம். இரும்பின் முறுக்கினை நோக்கலாம். ஆனால், நமது நரம்பின் கோணலை நயந்திட முடியுமா?