பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. குறவஞ்சிப் புலவர்

குறவஞ்சி இலக்கியம்

தன்னேரில்லாத் தமிழ் மொழியில் தோன்றிய சீரிய சிற்றிலக்கியங்களைச் செந்தமிழ் மக்கள் தொன்று தொட்டு தொண்ணூற்றாறு வகையாகப் பிரித்துப் பேணிக் காத்து வருகின்றனர். அவை இனிய தமிழில் இயன்ற 'இரட்டை மணி மாலை', முத்தமிழ்பாடும் 'மும்மணிக்கோவை', நாவவர் போற்றும் 'நான்மணிமாலை', கன்னித் தமிழின் கனிச்சுவை காட்டும் "கலம்பகம்", அன்னைத் தமிழின் அருமையை உணர்த்தும் "அந்தாதி", பைந்தமிழின் பாங்கினைப் பார் அறியச் செய்யும் பள்ளு”, புகழ் குன்றாத்தமிழின் வளம் கொழிக்கும் 'குறம்' முதலியனவாம். இவற்றுள், பள்ளு, குறம் ஆகியன முறையே நாட்டின் நிலபுலன்களைத் தம் உழைப்பால் உயரச் செய்யும் பள்ளர், நாடெங்கணும் திரிந்து ஆடிப்பாடி, அல்லலை மறந்து, இன்பமுடன் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நடத்தும் குறவர் ஆகியோரது வாழ்க்கை ஓவியங்களைத் தீந்தமிழில் தீட்டித் தருவனவாகும்: எனவே இவை நாம் அனைவரும் விரும்பும் நாடக இலக்கியங்களாக இலங்குவதில் வியப்பொன்றுமில்லை. அத்துடன் அவை நாட்டு மக்கள் நடித்து மகிழ்வதற்கு ஏற்ற பெற்றியினையும் பெற்று விளங்குகின்றன. மேற்கூறியவற்றுள் குறம் எனப்படுவதே குறவஞ்சி இலக்கியமாகும். குறவஞ்சி என்ற சொல்லுக்குப் பொருள் குறத்தி அல்லது குறப்பெண் என்பது ஆகும். மலைவாழ் மக்களில் ஒரு சிலர் மலைவாணர் அல்லது குறவர் ஆவர். அக்குடியில் தோன்றியவள் குறவஞ்சி ஆவாள், மேலும் வஞ்சி என்பது வஞ்சிக் கொடியை ஒத்த அழகிய பெண் என்று பொருள்படும். குறவஞ்சியினது சிறப்பியல்புகளே அழகுற விரித்துரைப்பது குறவஞ்சி நூலாகும்.