பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6. புதிய இலக்கியங்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி தமிழிலக்கிய வாழ்வில் குறிப்பிடத்தக்க சிறப்புடைத்து. ஆங்கிலம் அறிந்து அம்மொழி இலக்கியங்களையும், அவ்விலக்கியங்கள் குறித்து எழுதப் பெற்ற பல்வேறு ஆராய்ச்சி நூல்களையும் கற்றதன் பயனாய்த் தமிழ் மக்களிடையே தனித் தமிழ் ஆர்வம் தலையெடுக்கத் தொடங்கிற்று தமிழ் தனித்தியங்கவல்லது, வடமொழியைக் காட்டிலும் வளம் மிகுந்தது; உலக மொழிகளுள் நனிமிகப் பழைய மொழியாய ஏப்ரூ காட்டிலும் பழைமை உடையது என்ற உண்மைகளை உணரத் தலைப்பட்டனர். “சதுமறை ஆரியம் வருமுன் சகமுழுதும் நினதாயின், முதுமொழிநீ, அநாதி என மொழிகுவதும் வியப்பாமோ” என்றும், “யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்றும் பாடிப் பெருமை கொண்டனர்.

இவ்விழிப்புணர்ச்சியின் பயனாய்ப் பழைய தமிழ் இலக்கியங்களைத் தேடிப் பதிப்பிக்கவும், பயிலவும், அவற்றைப் பல்லாற்றானும் ஆராய்ந்து எழுதவும் முனைந்தனர்; பழந்தமிழ் இலக்கியங்களாய அகச் சான்று காட்டி, அக்காலத் தமிழர் மேற்கொண்ட அரசியல் அமைதி, வாணிகவளம், செல்வச் சிறப்பு, மக்கட் பண்பாடு, முதலாம்