பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

அனைவர் உள்ளத்தும் ஊறி, உரன் கொண்டு எழவல்ல பாக்களைப் புலவர்கள் பாடினர்; விடுதலை வேட்கை, நாட்டுப்பற்று உடையார்க்கே உண்டாதல் கூடும் என உணர்ந்த அவர்கள், அவ்வுரிமை வேட்கையை ஊட்டவல்ல, தமிழ்நாட்டுப் பழம் பெருமைகளைப் பாட்டிடை வைத்துப் பாராட்டினர்; அவ்வாறு எழுந்த இலக்கியங்களுள் ஒரு சில:

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு; நெஞ்சை
அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி
ஆரம் படைத்த தமிழ்நாடு.”

நாட்டுப் பற்றும் மொழிப் பற்றும் போன்றே, இனப்பற்றும் விடுதலைக் கிளர்ச்சிக்கு வித்திடும் என உணர்ந்தனர் மக்கள். மேலும் ஓர் இனம் ஆள, ஓர் இனம் அடிமைப்பட்டுக் கிடத்தல் ஆகாது என்றும் உணர்ந்தனர்; அந்நிலையினை மாற்றவும் வேண்டினர். அவ்வாறு விரும்பிய அவர்கள், அடிமைப்பட்டுக் கிடக்கும் அவ்வினத்தார்க்கு, அவர்களின் முன்னோர் பெருமையினை எடுத்துக் காட்டுவதன் மூலம், அவர்க்கு உரிமை வேட்கையினை உண்டாக்கலாம் என அறிந்தனர்; அதனால், இன்று அடிமைப்பட்டிருக்கும் நீவீர், பண்டு பாரெலாம் ஆண்ட பெருமைமிக்க இனத்தின் வழி வந்தவராயினர் என்று கூறும் இவ்வுணர்ச்சிப் பாக்கள் எண்ணற்றன எழுந்தன. அவற்றுன் ஒரு சில: