பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்கி

73

எதற்காகச் சொல்லுகிறேன் என்றால், பருத்தித் துறைக்கு நீங்கள் சும்மா வந்துவிட்டுத் திரும்பினால் போதும்! தங்களைச் சொற்பொழிவு ஆற்றச் சொல்லித் தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை!” என்று சொன்னார் திரு. ஏரம்பமூர்த்தி .

“அப்படியா சமாசாரம்? மனதிற்குள் இவ்வளவு கெட்ட எண்ணமா வைத்துக் கொண்டிருக்கிறீர்கள?” என்று நானும் மனதில் நினைத்துக் கொண்டேன். முன்னமேயே கடற்கரையோரமாகப் பருத்தித்துறை வரையில் போகத் தீர்மானித்திருந்தபடியால், “அதற்கு என்ன? அப்படியே ஆகட்டும்” என்றேன்.

“தாங்களும் ஸ்ரீ தூரனும் பருத்தித்துறைக்கு வந்து சமுகம் தந்தால் போதும். ஒரு வரவேற்பு நடத்துவோம். அதை ஏற்றுக்கொண்டு திரும்பிவிடலாம். பேச்சு, பிரசங்கம், சொற்பொழிவு எதுவும் கண்டிப்பாக வேண்டியதில்லை. தாய் நாட்டிலிருந்து வந்தவர்களைச் சேய் நாட்டிலுள்ள நாங்கள் உபசரிப்பது எங்கள் கடமையல்லவா? ஆனால் தங்களுக்கு எந்த விதத்திலும் தொந்தரவு மட்டும் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை! ஆகையால் நீங்கள் பேச வேண்டியதில்லை!” என்றார் ஸ்ரீ ஏரம்ப மூர்த்தி.

“சேய் நாட்டிலுள்ள உங்கள் கடமையைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் என் கடமை என்னவென்று எனக்குத் தெரியும். கட்டாயம் உங்களுக்குத் தொந்தரவு கொடுத்தே தீருவோம். நானும் ஸ்ரீ தூரனும் நாளை மத்தியானம் பருத்தித்துறைக்கு வந்தே தீருவோம்!” என்று சொன்னேன்.