பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலங்கையில் ஒரு வாரம்

மிழ் நாட்டுக்கு மாபெரும் தொண்டு செய்ய வேண்டும் என்ற ஆசை என் உள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தது; என் இரத்தத்தில் கொதித்துக்கொண் டிருந்தது; என் இருதயமாகிற வெளியில் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தது.

சென்ற ஆகஸ்டு மாதத்தில் திடீரென்று அந்த ஆசை பொங்கிப் பெருகிவிட்டது. “எனக்கு ஏதாவது போக்குக் காட்டாவிட்டால் பூகம்பம், பெரு வெள்ளம் முதலிய உற்பாதங்களாக உருவெடுப்பேன்!” என்று பயமுறுத்திற்று. அஸ்ஸாமிலும் உத்தரப் பிரதேசத் திலும், இப்படி யாரோ தேசத் தொண்டு செய்யும் ஆர் வத்தை அமுக்கி வைத்ததினாலேயே அங்கெல்லாம் மேற் கூறிய உற்பாதங்கள் நேர்ந்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் என்ன? ஆனால் நான் அத்தகைய தவறு எதுவும் செய்யவில்லை; அதாவது தேசத் தொண்டு செய்யும் ஆர்வத்தை அமுக்கிவிடவில்லை. அந்த ஆர்வத்தை எப்படி வெளிப்படுத்துவது என்று யோசித்துப் பார்த்தேன். அதற்கு இரண்டே இரண்டு வழிகள் தான் என் முன்னால் தென்பட்டன.

ஒன்று, காங்கிரஸ் மகா சபையின் அக்கிராசன பதவிக்குத் தேர்தலுக்கு நிற்க வேண்டும். அல்லது, குறைந்த பட்சமாக, மாகாண காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவிக்காவது நின்று தொலைக்க வேண்டும் ! இது ஒரு வழி.