உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

35


கலை, திராவிட மதம், திராவிட வைத்யம், திராவிட இசைவாணர்கள் -- என்றெல்லாம், அந்த நாளில், பலர், பல்வேறு துறைகளிலே, திராவிட மறுமலர்ச்சிக்காகப் பணிபுரிய முனைந்தனர். ஆனால் அந்த அடிப்படை வேலையில் ஆர்வம் காட்டத் தலைவர்கள் தவறி விட்டனர். அவர்கள் தங்கள் ஆற்றலை எல்லாம் அரசியல் அதிகாரம் எனும் மாய மானை பிடிக்கவே செலவிட்டனர். அதனால், அவர்கள், ஒவ்வொரு நகரிலும், பிரமுகர்களைச் சந்தித்தபோது, தேர்தலைப் பற்றிப் பேசி வந்தனரே தவிர, உத்தியோகத் துறையிலே, ஐயர்களுக்கு ஆதிக்கம் இருக்கிறது, அதை ஒழிக்க வேண்டும் என்பதை வலியிறுத்தி வந்தனரே யொழிய சமுதாயத்திலே படிந்து கிடந்த ஆரியத்தை அகற்ற, திராவிட உணர்ச்சியை ஊட்ட, பணிபுரியவில்லை.

"அந்த நாள்" தலைவர்கள்
மக்களுக்குப் புதிராயினர்

சமுதாயத் துறையிலே பார்ப்பனர் ஆதிக்கம் செலுத்துவது ஆபத்தல்ல; அரசியலில் ஆதிக்கம் பெற்றுள்ள பார்பனர்களாலேயே நமக்கு ஆபத்து- என்று வெளிப்படையாகவே அந்த நாள் தலைவர் பேசிவந்தனர். தலைவர்களின் பேச்சு அவ்விதமிருந்தது, டாக்டர் நடேச முதலியார் போன்ற ஒருவரிருவர் தவிர; அதேபோது மக்களின் பழகி, பிரசாரம் புரிந்து வந்த ஜே. என். ராமநாதன், கண்ணப்பர், டி. வி. சுப்பிரமணியன் போன்றவர்கள், திராவிடன் என்ற உணர்ச்சியை ஊட்டியும்

அரசியலிலே மட்டுமல்லாமல், சமுதாயத் துறையிலே பார்ப்பனர்கள் பெற்றிருந்த ஆதிக்கத்தை விளக்கிக் கண்டித்தும் வந்தனர். மக்களை அவர்கள். திராவிடர்களாக வாழும்படி வலியுறுத்தி வந்தனர். தலைவர்களோ, மக்களை, பார்ப்பனருக்கு எதிராக 'ஓட்' கொடுக்கும் அளவுக்குத்தான் உபயோகித்தனர். எனவே, மக்களுக்கு அந்தத் தலைவர்களின் போக்கு முதலில் புரியவில்லை; புரிந்த பிறகு பிடிக்கவில்லை; பிடிக்காததால் விலகினர்.