உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

இலட்சிய வரலாறு


வாடிய தமிழ்ப்பயிர் செழிக்க "வாய்க்கால் வெட்டிய " வீரர்கள்

தமிழ்மொழியைக் காப்பாற்ற ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் சிறை சென்ற காட்சி, தமிழரின் உள்ளத்திலே, ஓர் புது உணர்ச்சியை உண்டாக்கி விட்டது. தாலமுத்து நடராஜன் கல்லறைமீது தமிழர் கண்ணீர் சிந்தினர். இரு வாலிபர்களுக்குச் சாவு, பல வாலிபர்களுக்குச் சிறை, எல்லாம் தமிழ் மொழியின் பாதுகாப்பின் பொருட்டு என்பதை அந்தக் கல்லறையின் பக்கம் நின்று சிந்தித்த போதுதான், இந்நிலை மாறவேண்டும் என்ற உறுதி தமிழருக்குப் பிறந்தது. அப்போது தான் "தமிழ்மொழிக்குப் பிறமொழியால் ஆபத்து என்று அலறுகிறாயே தோழனே ! ஏன் வந்தது அந்த ஆபத்து, யாரால் வந்தது என்பதை எண்ணிப்பார். மொழிக்கு மட்டும் தானா, கலைக்கு, நெறிக்கு, பண்புக்கு, இனத்துக்கு, நாட்டுக்கு, உன் வாழ்வுக்கு, ஆபத்து வந்திருக்கிறதே அதைத் தெரிந்து கொண்டாயா ? எவரால் வந்தது இந்த ஆபத்து என்பதை அறிவாயா? ஏன் வந்தது என்பதை யோசிப்பாயா? நான் கூறுகிறேன் கேள். தமிழ்நாடு தமிழனிடம் இல்லை! ஆகவே தான் தமிழனுடைய பொருள் தமிழனிடம் இல்லை. பிற நாட்டான் எண்ணுகிற எண்ணமெல்லாம் இங்கு இப்போது சட்டமாகி விடுகிறது. பிறநாட்டானின் பொருளுக்கு இது மார்க்கட்டாகிறது. இந்நிலை மாறவேண்டும் மொழிப்போராட்டம் மட்டும் போதாது — இது முடிவல்ல; தொடக்கம்— இந்தியை விரட்டினால் மட்டும் போதாது; தமிழ்நாட்டின்மீது ஆதிக்கம் செலுத்தும் தீய சக்திகள் யாவும் தொலைய வேண்டும் - அதுவே நமது முழக்கமாக வேண்டும்— இனி அதுவே நமது போர்—நமது இலட்சியம்— தமிழ் நாடு தமிழருக்கே!" என்று பெரியார் இராமசாமி முழக்கமிட்டார். ஆம்! ஆம்! அறிந்தோம் ! தெளிந்தோம் ! என்று அன்று கடற்கரையிலே கூடிய இலட்சத்தை எட்டிப் பார்த்த பெருந்தொகையினரான மக்கள் முழக்கமிட்டனர் - உறுதி கொண்டனர். மக்களின் மனக் குமுறலைக் காட்டுவது போல கடலலை ஒலித்தது. மேலே நிலவு. தமிழரின் விழிப்புற்ற நிலைமை