50
இலட்சிய வரலாறு
அடிக்கடி 'சவுக்கு ' வீசவேண்டியும், ஒவ்வொருமுறை சவுக்கு வீசும்போதும், காளை துள்ளுவதோடு மட்டும் நிற்காமல், துரிதமாக இருந்தால், முதல் சவுக்கு வீசியபோது உண்டான ஆனந்தம் கருகி, இதேதடா தொல்லை ! என்று, சலிப்புப் பிறந்துவிடும் கையிலே சவுக்கு இருப்பினும், அடக்குமுறை உபயோகிப்பவருக்கும் அதேநிலைதான். ஆரம்பத்திலே அதனை உபயோகிக்கும்போது ஏற்படும் களிப்பு, அதனை அடிக்கடி உபயோகிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் உண்டாகாது. சலிப்பும், இப்படியே. அடக்குமுறையைக்கொண்டே எவ்வளவு காலத்துக்குத் தான் ஆட்சியை நிலைநிறுத்துவது என்ற அச்சமும் ஏற்படும்.
அதுபோலவே, முதன் முறை தாக்குண்ட போது, துயரப் பட்டு, திகைத்தவர்கள், பிறகும் அடிக்கடியும் தாக்குதலை அனுபவிக்க நேரிட்டால், துயரமும் திகைப்பும் தீய்ந்துபோகும்; உறுதியும் எதிர்ப்புச் சக்தியும் புதிதாகத் தோன்றும்.
அடக்குமுறை, இவ்விதமான பலன்கள் தரும், ஒருவகை விசித்திர சக்தி.
சாவது அவ்வளவு கஷ்டமான தல்ல — என்று கூறிக் கொண்டே இறந்தாள் ஓர் மங்கை— கொடுங் கோலனிடம் சிக்கியபோது, அவளுடைய கணவனின் செவியிலே அந்த வாசகம் வீழ்ந்தது ! சாவது அவ்வளவு கஷ்டமில்லை ! செத்துக் கொண்டே கூறினாள் சேல்விழியாள் !—நானோ சாவுக்கு அஞ்சி, கொடுங்கோலனைச் சரணடையலாமா என்றுகூட யோசித்தேன். சே ! நான் கோழை ! ஆகாது இக்கோழைத்தனம் என்று கூறி, சீறிப் போரிட்டுக் கொடுங்கோலனை விரட்டினான், என்றோர் கிரேக்கக் கதை உண்டு. அது போன்றே, அதிகாரத்தைப்
பெற்றிருக்கும் கட்சி அடக்குமுறை கொண்டு எதிர்க்கட்சியைத் தாக்கும் போது, அந்தத் தாக்குதலைச் சமாளித்து விட்டால், பிறகு பிறக்கும் புதிய சக்தியின் உருவைக் கண்டு நாமே ஆச்சரியமடைவோம்.