உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

இலட்சிய வரலாறு


இலட்சம் இருக்கும் என்று மகிழ்ச்சியுடன் மதிப்பிடும் அளவுக்கு நிலைமை முன்னேறி, இதெல்லாம் தேர்தலுக்காக, பதவிக்காக பட்டத்துக்காக, காண்டிராக்டுக்காக என்ற பழிச் சொல்லிலிருந்து விடுபட்டு இது சமுதாயத்தைப் புது உருவாக்க, அறிவுத் துறையிலே புரட்சியை உண்டாக்க, என்று கூறத்தக்க முறைக்கு முன்னேறியுள்ள இந்த மாபெரும் சக்தியை உதாசீனப்படுத்துபவர், உலுத்தராக இருக்க முடியுமே தவிர, உள்ளத்தின் போக்கை யூகித்துரைக்கக் கூடியவர்களாக இருக்க முடியாது. ஆகட்டும்; அடுத்த தேர்தலிலே, அரைகோடி ஒரு கோடி செலவிட்டாவது இதுகளைத் தொலைத்துவிடுகிறேன் என்று கூறவும் முடியாது. பதவி பிடிக்கும் சுயநலமிகள் இவர்கள், பாரீர் இன்னின்னார் இன்னின்ன பதவிக்குப் பல்லிளிக்கிறார்கள் என்று வெட்ட வெளிச்சமாக்கிக் காட்டி, 'இதுகளை வெளியே தலைகாட்ட முடியாதபடி செய்து விடுகிறோம்' என்று வீம்பு பேசவும் இடமில்லை.

"உரத்த குரலிலே கூவிடுவோருக்கு உயர்ந்த பதவி கொடுத்துவிட்டு, செல்லப்பிள்ளையாக்கிக் கொள்வோம் " என்ற தந்திரம் புரியவும் இடமில்லை. ஏனெனில், திராவிடர் கழகம், இத்தகைய ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டது— சேலத்தில் புடம் போட்ட தங்கம், மாற்றுக் குறையாததாகி விட்டது. இந்த மகத்தான உண்மையை, "முகத்திலுதித்த" முத்தண்ணாக் கூட்டம், சற்று உணர வேண்டும்.

"இருக்கட்டும் இருக்கட்டும், இதுகளின் மீது காங்கிரசை மோதவிட்டு, இரு மண்டைகளிலிருந்தும் குருதி கொட்டக்கண்டு மகிழ்வோம்" என்ற நயவஞ்சக நினைப்புக்கும், இடமளிக்கவில்லை கழகம். ஏனெனில், காங்கிரஸ் கட்சியுடன், தேர்தலிலோ, பதவிகளிலோ போட்டியிடும் எண்ணத்தையும் அறவே நீக்கிவிட்ட நிலை பெற்றுவிட்டது.