உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேசைக்காரர்:

வட்டார வழக்குச் சொல் அகராதி

395

மிசை என்பது மேல். உயரமான பலகை என்னும் பொருளில் மேசை வழக்குப் பெற்றது. அதனை மேடை என்பார் பாவாணர். நெல்லை மாவட்டத்தில் 'மேசைக்காரர் மேசைக்காரர்' என்று அலுவல்

பார்ப்பவரை

(அலுவலரை) வழங்குகின்றனர். அலுவலர் என்றால் மேசை கண்முன்னே வருகின்றதே.

மேட்டிமை:

அலுவல்

மேடு=உயரம். மேட்டிமை=தன்னை உயர்வாக - தற்பெருமை யாகப் பேசும் இயல்பை மேட்டிமை என்பர். அத்தகையவனை 'மேட்டிமைக்காரன்' எனப் பழிக்கவும் செய்வர். மேட்டுக்குடி என்பது செழிப்பான வாழ்வினர் குடியிருப்பு. இம் மேட்டிமை செருக்குத் தனமாகும். இது நெல்லை, முகவை வழக்கு.

மேலாக்கு:

பாவாடை கட்டும் சிறுமி மேலே 'தாவணி' போடுவது வழக்கம். தாவணி சட்டையின் மேலே போடுவதால் அதனை மேலாக்கு என்பது நெல்லை வழக்காயது. காதணிகலங்களுள் மேலாக்கு என்பதும் ஒன்று.

மைக்குட்டி:

குமரி மாவட்டத்தார் கம்பளிப் பூச்சியை மைக்குட்டி என்கின்றனர். கம்பளிப் பூச்சியின் கருவண்ணம் கருதிய பெயர் அது. ஓர் உயிரை மதிக்கும் மதிப்பீடாகக் குட்டி விளங்கி னிமை செய்கின்றது.

மொச்சை:

மொச்சை குத்துச் செடி வகையைச் சேர்ந்தது. மொச்சைப் பயறு மற்றைப் பயறு வகைகளுள் பெரியது. அவரை வகையைச் சேர்ந்ததாகும். அதன் இலை கொடி காய்த் தோல் ஆகியவற்றில் ஒருமணம் (நாற்றம்) உண்டு. அதனால் வில்லுக்குழி வட்டாரத்தார் மொச்சை என்பதற்கு நாற்றம் எனப் பொருள் தந்துள்ளனர்.

மொட்டு:

மொட்டு என்பது பூவின் முகைப் பருவமாதல் பொது வழக்கு. மொட்டு என்பதற்கு முட்டை என்னும் பொருளைப் பழனி வட்டாரத்தார் வழங்குகின்றனர். நீர்க் குமிழியை முட்டை என்பது முகவை, நெல்லை வழக்கு.