உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

இளங்குமரனார் தமிழ்வளம்

1

லத்துச் சென்றும் மண்ணைப்பெருக அள்ளிவருவது. அம்மண் வெட்டிபோல் அள்ளி அள்ளித் தின்பவனைக் ‘கோடி மண் வெட்டி' என்பர். பெருந்தீனியன் என்பது பொருளாம்.

சோற்றுப்பானை, சோற்றுவண்டி, குப்பை வண்டி என்பன வும் பெருந்தீனியனைக் குறிப்பதே. ‘சோற்றுத் துருத்தி' என்றார் பட்டினத்தார். இத்தகையவர்களைக் கொண்டே “சோறு கண்ட இடம் சுவர்க்கம் என்னும் புது மொழி எழுந்துள்ளதாம். குண்டோதரன் என்பது தொன்மவழக்கு. குண்டு = குழி, பள்ளம்; உதரன் = வயிறன்.

கோவிந்தா! கோவிந்தா! - எல்லாமும் போயிற்று

இறந்து போனவர்க்குப் பல்லக்கு, பாடை எனக் கட்டி இடுகாடு அல்லது சுடுகாடு கொண்டு போகும் போது ‘கோவிந்தா கோவிந்தா' என்று சேர்ந்து சொல்லுவர். கோவிந்தன் தன் திருவடிப் பேற்றை அல்லது வைகுண்டத்தை அருளவேண்டும் என்பதற்காக வேண்டுவதாகக் குறிப்பர். ஆனால் கோவிந்தா கோவிந்தா என்பது இழப்பைக் குறித்தலால், “அவர் கோவிந்தா ஆகிவிட்டார்” என்றால் பொருளை எல்லாம் இழந்துவிட்டார் என்னும் பொருள் தருவதாக வழக்கில் வந்து விட்டது. பிள்ளைகள் விளையாடலில் அடுத்தவர்க்குத் தோல்வி வர வேண்டும் என்று கோவிந்தாப்போடுவதும் உண்டு. கோவிந்தனுக்கு உரிய விளி, கோவிந்தா!

கோழிகிண்டல் - காப்பின்மை, செயற்பாடின்மை.

வீட்டிப் பின்புறக் கொல்லையில் கீரை பாவுதல் நடை முறை. கீரை பாவினால் மட்டும் போதாது. அதனைக் கோழி கிண்டிக்கிளைக்காவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். விதை தெளித்துக் காக்காவிட்டால் அவ்விதையைக் கோழி கிண்டிக் கிளறித் தின்றுவிடும். முளைவிட்டு ஒன்றிரண்டு வருமாயின் அதுவும் அதன் கிண்டிக் கிளறலால் வேரழிந்து முளையழிந்து கெட்டுவிடும். ஆதலால் ‘கோழிகிண்டல்' என்பது காவாமையால் ஏற்படுவது என்பதைக் கண்ட அறிவு, அதற்குக் காப்பிலாத் தன்மையை வழங்குகின்றது. அவன் வாழ்வில் கோழி கிண்டுகிறது என்றால், செயற்பாடற்ற வறுமையைக் காட்டுவ தாக விரிந்தது.