4. வஞ்சிப்பாவும் அதன் வகையும் வஞ்சிப்பா இன்னதென்பது
82. தன்தளை பாதம் தனிச்சொல் சுரிதகம்
என்றிவை நான்கும் அடுக்கிய தூங்கிசை வஞ்சி எனப்பெயர் வைக்கப் படுமே.
-யா. வி. 90 மேற்.
இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நால்வகைப் பாவினுள் எஞ்சி நின்ற வஞ்சிப்பாவாவது இன்னது என்பது கூறிற்று.
ள்.) வஞ்சித்தளை அடி தனிச்சொல் சுரிதகம் என்னும் இவை நான்கும் முறையே வரத் தூங்கிசையால் நடப்பது யாது அது வஞ்சிப்பா என்று பெயரிட்டு அழைக்கப்பெறும் என்றவாறு.
'தன்தளை பாதம்' எனவே தூங்கிசை என்பது அமையுமாகத் தூங்கிசை வஞ்சி என்றது என்னை எனின், செப்பல், அகவல், துள்ளல் போலத் தூங்கிசையும் மூவகைப்படும் என்பது அறிவித்தற்கு என்க.
தூங்கல் ஓசை ஏந்திசைத் தூங்கல், அகவல் தூங்கல், பிரிந்திசைத் தூங்கல் என்று மூவகைப்படும். ஒன்றிய வஞ்சித் தளையான் வருவது ஏந்திசைத் தூங்கல் ; ஒன்றாத வஞ்சித் தளையான் வருவது அகவல் தூங்கல் ; இவ்விரு தளைகளாலும் பிறதளைகளாலும் மயங்கி வருவது பிரிந்திசைத் தூங்கல்.
வஞ்சி என்று அமையாது வஞ்சி எனப் பெயர் வைக்கப் படுமே என்ற விதப்பினால், வஞ்சிப்பா குறளடி வஞ்சிப்பா எனவும் சிந்தடி வஞ்சிப்பா எனவும் இருவகையாம் எனக்கொள்க.
என்னை?
“விதப்புக் கிளவி வேண்டியது விளைக்கும்"
என்றார் ஆகலின்.