5. மருட்பா
86. வெள்ளை முதலா ஆசிரியம் இறுதி
1
கொள்ளத் தொடுப்பது மருட்பா ஆகும் ;
கலிநிலை வகையும் வஞ்சியும் பெறாஅ.
இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் வெண்பா முதலாக ஆசிரியம் இறுதியாக வரும் மருட்பாவின் இலக்கணம் கூறிற்று.
(இ - ள்.) வெண்பா முதலாகவும் அகவல் இறுதியாகவும் வரத் தொடுப்பது மருட்பா என்னும் பெயர் பெறும். இவ் விருபாக்களும் இணைந்து வருதல் அன்றிக் கலிப்பாவும் வஞ் சிப்பாவும் கலக்கப் பெறா என்றவாறு.
மருளாவது மயக்கம். இருவகைப் பாக்கள் கலந்து நிற்றலின் மருட்பா ஆயிற்று. அம்மை அப்பர் ஒன்றிய உடலம் போலவும், நரமடங்கல் போலவும் இரு கூறமைந்து ஒன்றிய ஒருபா இஃதென்க.
இம்முறையே முறை என்பாராய் வெள்ளை முதலா ஆசிரியம் இறுதி என்றார் ; இம் முறை மயங்காது என்க.
வெள்ளை முதலா ஆசிரியம் இறுதியாத் தொடுப்பது எனினும் அமையுமாகக் 'கொள்ள' என்ற விதந்தது என்னை எனின் இம்மருட்பா புறநிலை வாழ்த்து மருட்பா, கைக்கிளை மருட்பா, வாயுறை வாழ்த்து மருட்பா, செவியறிவுறூஉ மருட்பா என நாற் கூறுபடும் என்பது கொள்ளுதற் கென்க. என்னை?
(கட்டளைக் கலித்துறை)
"பண்பார் புறநிலை பாங்குடைக் கைக்கிளை வாயுறைவாழ்த் தொண்பாச் செவியறி வென்றிப் பொருள்மிசை ஊனமில்லா வெண்பா முதல்வந் தகவல்பின் னாக விளையுமென்றால் வண்பான் மொழிமட வாய்மருட் பாவென்னும் வையகமே
என்றார் ஆகலின்.
1. ஈற்றடியொன்றும் தொல்காப்பியனார் வாக்கு. தெரல். செய் 109.
-யா. கா. 35.