உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

இளங்குமரனார் தமிழ்வளம்

15

சங்கப் புலவர்கள் பாடு புகழுக்கு இடனாகிய ஊர் பழனி! சங்க நாள் வேந்தர் ஆட்சியில் தழைத்தது அது.

அகப்பாடல்கள் இரண்டில் அகப்பட்டுக் கிடக்கிறது பழனி; எப்படி?

66

நடுவேள் ஆவி, அறுகோட்டியானைப் பொதினி”

“நெடுவேள் ஆவி, பொன்னுடை நெடுநகர்ப் பொதினி” இப் 'பொதினி'யே 'பழனி' யாயது.

பொதினி, யாருக்குரியதாகப் பழநாளில் இருந்தது, ஆவி யர்க்கு இருந்ததாகச் சொல்கின்றனவே சுட்டப்பட்ட பாடல்கள் இரண்டுமே (அகம். 1, 61).

பண்டைத் தமிழகத்தில் குறுநில மன்னர்களாக விளங்கிப் பெரும் புகழ் கொண்ட குடிகளுள் ஒன்று ஆவியர் குடி. அக்குடி முதல்வன், ‘நெடுவேள் ஆவி'; அவன் முதல்வனாக, அவன் வழி வந்தோர் ஆட்சி புரிந்தது ‘பொதினி’; பொதினியை ஆவியர் குடியினர் ஆளுங்கால் புகழொடும் விளங்கியவன், பேகன் என்பான். உடுத்தாததும், போர்த்தாததும் ஆகிய மயிலுக்குப் போர்வை வழங்கிப் புகழ் கொண்டானே பேகன்; அவனைப் பற்றிப் புறப்பட்ட புறப்பாட்டுகள் ஏழு (புறம் 141-7) அவற்றில் அவன் ஆ வியர்கோ' எனப்படுவான். அவன் பெயரோ வையாவிக் கோப்பெரும் பேகன்' எனப்படும். இன்றும் அவன் வையாவி, பழனிக்கு அருகே உண்டு. அதன் இக்காலப் பெயரோ 'வையாபுரி' என்பது!

ஆவியர் ஆட்சி செய்த பொதினிக்கு ‘ஆவிநன்குடி' என்ப தொரு பெயர். திருவொடு சேர்ந்து திருவாவிநன்குடி என்றாயிற்று. திருவாவின்நன்குடியைச் சொட்டச் சொட்டப் பாடுகின்றார் அருணகிரியார். அவர் பாடல்களில் ‘பழநி’ தலை காட்டுகிறது. பதிப்பார், பதிப்புப்பாங்கு ஆகலாம்; எப்படி? மாம்பழக் கவிச்சிங்க நாவலர் பாடல் தொகுப்பைத் தொகுத்து வெளி யிட்டவர் பழநி சாமியார்; அவர் பதிப்பில் 'பழனி'யைப் பார்க்க இயலுமா? என்னதான் ‘பழநி' இருப்பினும் 'பழனாபுரி'யை மாற்ற முடியவில்லை! அஃது, உண்மையை நிலைப்படுத்தி விடுகின்றது. வண்ணச்சரபம் தண்டபாணி அடிகள் பாடினார் ‘பழனித் திருவாயிரம்'. அதில் எங்கும் பழனி! எல்லாம் பழனி! ‘பழநி' தலைகாட்டவில்லை! பாடினோரும் பதிப்பாளரும் ஒரு குடியர்! ஒரு நிலையர்! அதனால் பழனியே கமழ்கிறது.