உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

இளங்குமரனார் தமிழ்வளம்

18

ஐயறிவுடைய அம்மாடுகள் தங்களைப் பேணிய அவ்வாயன் மேல், எவ்வளவு நல்லெண்ணம் கொண்டிருந்தால் இவ்வாறு கண்ணீர் வடித்துக் கலங்கி நிற்கும் என அவ்வழியே சென்ற சுந்தரனார் என்னும் பெயருடைய சித்தர் உருகி நின்றார். மாட்டின் இயல்புக்காகவும் ஆயன் இயல்புக்காகவும் உருகி நின்ற சித்தர், அம்மாடுகள் வீடு சேர வேண்டுமே என்னும் அருள் ரக்கத்தால், இறந்துபோன மூலன் கூட்டுள் தம்முயிரைச் செலுத்தினார். செலுத்திய அளவில் உயிர் பெற்று எழுந்த மூலனைக் கண்ட மாடுகள், களிப்புற்றன. வழக்கம் போல் செல்லும் வழியே சென்று வீடு சேர்ந்தன: உரிய இடத்தை மாடுகள் சேர்ந்து விட்டதை அறிந்து கூடுவிட்டுக் கூடு பாய்ந்த சுந்தரனாம் மூலர் மகிழ்ந்தார்.

இங்கே கூடு விட்டுக் கூடு பாய்தல் என்பது, ஓருயிரின் துடிப்புக்காக மற்றோர் உயிர் துடித்து, அதுவும் தானும் வேறில்லை: ஒன்றே: என்று மெய்ப்பிக்கின்ற நிலையேயாம். இதனையே கம்பர் ‘மாறிப்புகுதல்' என்பார்.

முல்லைக் கொடி ஆடுவதைக் கண்டான் பாரி: அதன் ஆட்டம் அவன் உள்ளத்தை ஆட்டியது; முல்லைக் கொடியே தானாகி நின்ற நிலையே அவன் கொடையாகும்.

மேகம் கண்டு ஆடிய மயிலைக் கண்ட பேகன், அது நடுங்குவதாக எண்ணினான்; அம்மயிலாகவே அவன் மாறி விட்டான். அதுவே மயிலுக்குத் தான் போர்த்தியிருந்த போர்வையை அளிக்க வைத்தது.

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம், அப்பயிர் வாட்டம் போலவே தாமும் வாடினார் வள்ளலார்.

வீடுதோறும் இரந்தும் பசி நீங்காது உழல்வாரைக் கண்டு தாமே பசிக்கு ஆட்பட்டார் போல் வருந்தினார் அவ்வள்ளலார்.

இவ்வுயர் தன்மைகள் எல்லாம் ஓருயிர்க்காக ஓருயிர் துடித்து உதவி செய்தலாகிய கூடு விட்டுக் கூடு பாய்தலேயாம்.

இவ்வியல்பு பெருகப் பெருக உலகம் உய்யும்; உயிர்கள் நலம் எய்தும்; மண்ணிலேயே விண்ணுலக இன்பத்தைக் கண்ட பேறு வாய்க்கும். ஆதலால் சித்தர்களை எண்ணியும், அவர் நூல்களை ஆய்ந்தும் அவர் வழிகளைக் கடைப் பிடித்து வாழ்ந்து வருதலால், உலகை அலைக் கழிக்கும் வன்முறைகள்