உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

என்கிறார் (994).

இளங்குமரனார் தமிழ்வளம் – 19

அலை கொழித்துத் திரட்டிய மணல் மேட்டை அசையும் துகிலைப் போலக் காற்றுத் தூற்றும் கடற்கரைத் தலைவனே” என்று குறிப்பிடுவதன் வாயிலாகத் தலைவன் தலைவியர் சந்திப்பு ஊரவர் அறிந்து தூற்றப்படு பொருளாகியமையைத் தோழி உணர்த்துகிறாள் தலைவனுக்கு. இதன் உட்கருத்து ‘காலம் நீட்டாது உடனே மணந்து கொள்’ என்று ஏவுதலாகும். இதனை,

"முழங்குதிரை கொழீஇய மூரி எக்கர்

நுணங்குதுகில் நுடக்கம் போலக் கணங்கொள ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப”

என்கிறாள் (நற்.15).

உள்ளகத்துப் பொருளாகிய அகம், உவமை வழியால்கூட வெளிப்படல் சிறப்பன்று என்று கொண்ட உயர்நெறியே இவ் வுள்ளுறை எனல் சாலும். இதன்மேல் இறைச்சி என்பதொன்றும் உண்டு. அதனை உவமையியல் முதலியவற்றில் விரியக் கூறுகிறார் ஆசிரியர்.

கருப்பொருளை அடியாகக் கொண்டு உள்ளுறை தோன்றும் என்னும் ஆசிரியர் ‘தெய்வம்' என்னும் கருப்பொருள் உள்ளுறையில் இடம் பெறக் கூடாது என்று வரம்பு காட்டுகிறார்.

புலப்பாடு இல்லாத ஒன்றைக் காட்சியளவால் விளக்கிப் புலப்படுத்தலே முறை. அவ்வாறு காட்சி வகையால் காட்டமுடியாத ஒன்றால், புலப்படுத்த எண்ணல் புலப்பாடாக்காது என்பதால் விலக்கினார் எனத் தெளியலாம்.

எழுதிணை

ஏழுதிணைகளாகக் கூற எடுத்துக் கொண்டவற்றுள் முந்து நிற்கும் கைக்கிளை இலக்கணமும், பிந்து நிற்கும் பெருந்திணை இலக்கணமும் இயல் நிறைவில் கூறி அமைகிறார்.

மக்கள் எழுவர் என்றால், மூத்தாரும் இளையாரும் ஒப்ப ‘மக்கள்’ எனவே படுவர். அது போல், அகத்திணை ஏழு எனின், முன்னும் பின்னுமாகிய இவையும் அகத்திணைகளேயாம். புறத் திணையொடு பொருந்துவன ஆகா. அகம் புறம் எனல் இரண்டே யன்றி அகப்புறம் புறப்புறம் என்பன பொருந்தாப் பிற் பிரிவாயவை.

இளையராய் இருப்பார் விளையாட்டுக் காதலும், வேட்கை மிக அமைந்தார் அளவொடும் அமையாராய்க் கொள்ளும் பெருவிருப்பும், முறையே இக் கைக்கிளை, பெருந்திணை எனலாம்.