உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

மணப்பெண் பார்க்க வருவார்; வீடு பார்க்கின்றனர்; வளம் பார்க்கின்றனர்; பெற்றோர் தமக்குள் பெண் ஆண் பிடித்தம் பற்றிப் பேசிக் கொள்கின்றனர்; உற்றார் உறவினர் பிடித்தமும் கருதுகின்றனர். தப்பித் தவறி ஆணின் விருப்பைக் கேட்பாரும் பெண்ணின் விருப்பைக் கேட்டு நடத்தல் அருமையே! இந் நிலையில், இருமனம் ஒன்றி விட்டாரையும், சாதி சமய செல்வ நிலைகாட்டி ஒன்றிவிடாது தடுக்க முந்துவாரே பலராகின்றனர்.

போராடிப் பெற முடியாராய் அவர் ‘முடிந்த பின்னர்' இவர் முட்டி என்ன? மோதி என்ன? சாதி சமயம் செல்வம் கணியம் கண்மூடி வெறி இவை இறந்தவரை மீட்டுத் தருமா?

தொல்காப்பியர் கூறிய பத்துப்பொருத்தம் பற்றி எண்ணிப் பாராமல், சோதிடன் சொல்லும் பத்துப் பொருத்தமும் பார்த்துப் பொருத்தமென முடித்து, மனப்பொருத்தம் இல்லாதார் வாழ்வு, வீட்டிலேயே விரும்பி உண்ட ஈக்கி வைக்கப்பட்ட நிரய (நரக) வாழ்வு என எண்ணுவார் பெருகினால் அல்லாமல், இதற்குத் தீர்வு வாயாதாம்.

களவியலைக் கூறத் தொடங்கும் ஆசிரியர்,

"இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்

காமக் கூட்டம் காணும் காலை

மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்

துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே” என்கிறார் (1038)

இதற்கு, "உயிர்களுக் கெல்லாம் பொதுவாகிய இன்பமும், அவ்வின்பத் துய்ப்பிற்குத் தேவையாம் பொருளும், அப் பொருள் தேடுதற்காம் அறமும் என்பவற்றை ஒருங்கே கொள்ளும் வகையில் அன்பொடு கூடும் கூட்டத்தின் தொடக்கமாகியது களவு எனப்படும் காமக் கூட்டம். அக் கூட்டத்தை ஆராயும் போது அது, மறையோர் மணமாகச் சொல்லப்படும் மணம் எட்டனுள் இசைத் துறை வல்லோராம் யாழோர் (கந்தவர்) மணத்தினை ஒப்பதாம்” எனல் பொருளாம்.

களவு என்பதை விளக்க உவமை கூறுவார், அயல் நெறியாளர் மணவகையுள் ஒன்றனைச் சுட்டினார் என்பதும், அச் சுட்டுதலும் கண்முன் காணற்கியலாக் கற்பனைப் படைப்பராம் கந்தருவரைக் காட்டினார் என்பதும் உரிய பொருள் விளக்கத்திற்கோ, உரிய தமிழ் நெறிக்கோ உதவாததாம்.

தமிழ் கூறு நல்லுலக வழக்கும் செய்யுளும் நோக்கிக் கூறும் குறிக்கோள் உடையவர், விண்ணுலாவுவாராக அயலார் இட்டுக் கட்டிக் க்