உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

165

ஆகாக் குணங்களை அடுக்கி வைத்துள்ள இந் நூற்பாவினை உணர்ந்து பாராமல் எத்தனை குடும்பங்கள் கெட்டுள்ளன; கெட்டு வருகின்றன! கெடுப்பவற்றைக் கூறியது கதைப் படைப்புக் கருவுக்காகவா? கடாத வாழ்வு சுரக்கட்டும் என்னும் பேரருள் குறிப்பு என உணர்வார், உணர்ந்த பின்னரேனும் வாழ்வில் போற்றி உய்வார்!

தொல்காப்பியர் வேட்கை, தம் அறிவைப் பாராட்டுவர் கற்பார் என்பது அன்று. கற்பார் நிற்பாராதல் வேண்டும் என்பதே. அதனை மெய்ப்பாட்டியல் நிறைவு நூற்பாவான் உணர்த்துகிறார்:

“கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்

உணர்வுடை மாந்தர்க்கு அல்லது தெரியின்

நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே

என்பது (1221). உணர்வுடை மாந்தர் உணர்வர்; பிறர் எண்ணி அறிதல் அரிது. ஆதலால், உணர்ந்து போற்றுக என்றார்.

“உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே

என்பதும் அவர் உரை (876).

உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன்

பாத்தியுள் நீர்சொரிந் தற்று

என்பது வள்ளுவர் உரை (குறள்.718).

உவமை

முதிய மாடு ஒன்று புல்லைக் கடித்தது; புல்லைக் கடிக்க முடியாமல் நாவால் தடவி வளைத்தது;அகப்பட்ட அளவில் குதப்பியது. அதனைக் கண்ட ஒரு முதியவர், “பல்போனவன் பக்காவடை தின்பது போலத் தின்கிறது” என்றார்.

அவரை ஏறிட்டுப் பார்த்தேன்; அவர்க்குப் பல் இல்லை. அவர் பட்டறிவு அப் 'பழமொழி'யாக வெளிப்பட்டது என உணர்ந்தேன். அது புதுமொழியே. அவரே சொன்னதாகக் கூட இருக்கலாம். ஆனால், பழமொழி, உவமை, விடுகதை போன்றவை தோன்றும் பட்டறிவு நன்கு புலப்பட்டது.

மாநிறம், கிளிப்பச்சை, மயில் கழுத்துச் சீலை, காக்கைக் கறுப்பு இப்படிப் படைக்கப்பட் வை பொதுமக்கள் கொடையே. புலிப்பாய்ச்சல், ஆமைநடை, குதிரை ஓட்டம், மாடுபோல

உழைத்தல்

இன்னவையும் அப்படியே.